தேனி மாவட்டம், கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. வ.உ.சி., தெருவில் அமைந்துள்ள இந்த காளியம்மன், மிகுந்த வரப்பிரசாதி. கேட்ட வரங்களை நிறைவேற்றிக் கொடுப்பவள். எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களின் விருப்ப தெய்வமாக இவள் வழிபடப்படுகிறாள்.
இக்கோயிலில் உள்ள இன்னொரு சிறப்பு, அம்பிகை சிலா ரூபத்தில் இல்லை. மாறாக, அவளது ஆயுதமான திரிசூலத்தின் வடிவில் அருள்பாலிக்கிறாள். மக்களைக் காக்கும் அருட் பணியைச் செய்யும் தெய்வங்களுக்கு உறுதுணையாக இருப்பவை அவர்களது ஆயுதங்கள். எனவேதான் அனைத்து தெய்வங்களும் ஆயுதங்கள் உடனேயே காட்சி தருகின்றனர். இங்கே பக்தர்களைக் காத்தருளும் ஸ்ரீ காளியம்மன் அவளுக்குரிய திரிசூலத்தின் வடிவிலேயே இருந்து அருளாட்சி புரிவதால் இந்த கோயில் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.
அபிஷேக, ஆராதனைகள் பூஜைகள் இந்த திரிசூலத்திற்கே செய்யப்படுகின்றன. திருவிழாக் காலங்களில் மட்டும் சூலத்திற்கு அம்பிகை போல அலங்காரம் செய்யப்படுகிறது.
இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பாபிஷேக விழா கடந்த செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. ஏப்ரல் 26-ம் தேதி கும்பாபிஷேக விழா, காப்பு கட்டி, முளைப்பாரி பயிரிடுதலுடன் விழா தொடங்கியது.
தினமும் மாலை வேளையில், பெண்கள் முளைப்பயிருக்கு, 'கும்மி' கொட்டி வழிபட்டனர். கும்பாபிஷேக வைபவம், நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
3 கால பூஜைகளுக்குப் பின், இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில், கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. புனித தீர்த்தம் வைக்கப்பட்ட கும்பக் கலசத் தீர்த்தங்களை, 'ஓம் சக்தி'... 'பராசக்தி'... என்ற கோஷங்கள் முழங்க கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பால், பன்னீர், இளநீர், திரவியப் பொடி உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் நடந்தன. பின்னர், அம்பிகைக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது .
ஆயுதமே இங்கு தெய்வமாக வழிபடுவதால், இங்கு வேண்டிக்கொள்ள தோஷங்கள் நிவர்த்தியாகி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பயணம் தடையின்றி தொடர, வெளியூர், வெளிநாடுகளில் இருப்போர் பாதுகாப்புடன் பணிபுரிய, காரியத்தடை நீங்க, எடுத்த காரியத்தில் வெற்றி பெற, குழப்பம் நீங்கி மன அமைதி கிடைக்க... என பல பிரார்த்தனைக்காகவும் பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஸ்ரீகாளியம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்து, அதை அபிஷேகம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
from Latest News https://ift.tt/Yj29pab
0 Comments