நாமக்கல்: ஏடிஎம் இயந்திரத்தை காஸ் வெல்டிங் மூலம் வெட்டி, ரூ.4.90 லட்சம் கொள்ளை - நள்ளிரவில் துணிகரம்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சேலம், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள தனியார் வணிக வளாக கட்டடத்தில், தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஏ.டி.எம் மையத்தில், கணேசன் என்பவர், கடந்த 2 மாதங்களாக, தினந்தோறும் காலை மற்றும் மாலையில் சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் இருந்து வந்தார்.

கொள்ளையடிப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம்

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் கணேசன் வழக்கம்போல் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்யச் சென்றார். அப்போது, ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது. இதனால் குழம்பிய கணேசன், அங்கிருந்தவர்களின் உதவியோடு ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை திறந்து பார்த்து உள்ளார். அப்போது, அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரம் காஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், அந்த ஏ.டி.எம் மையம் முழுவதும் புகை படர்ந்து இருந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற ரோந்து போலீஸார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணையை மேற்கொண்டனர். அவர்களின் முதல் கட்ட விசாரணையில், காஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். இந்திரம் வெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.4,89,900 கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

கொள்ளையடிப்பட்ட ஏ.டி.எம் இயந்திரம்

மேலும், ஏ.டி.எம் மையத்தின் நுழைவாயிலில் இருந்த எச்சரிக்கை ஒலிப்பானின் வயரை துண்டித்துவிட்டு, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஏ.டி.எம் மையம் அமைந்துள்ள கட்டடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, புதுச்சத்திரம் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/5sbpvH7

Post a Comment

0 Comments