``பேரறிவாளன் விடுதலை, ஜிஎஸ்டி வரைமுறை... இணைத்துப் பார்க்க வேண்டும்" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "உச்ச நீதிமன்றத்தில் வரி விதிப்பு தொடர்பாக மிக முக்கியமான தீர்ப்பு வந்துள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவை மாநில அரசுகள் கட்டாயம் கடைபிடிக்க தேவையில்லை என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்று தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது.

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜி.எஸ்.டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பல ஆண்டுகளாக மாநில உரிமைகளை குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் செயல்பாடு இருந்தன.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

இந்நிலையில் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்த்தி இருப்பது கவனிக்கத்தக்கது.

ஜி.எஸ்.டி கவுன்சில் தொடர்பான தீர்ப்பு, சட்ட அமைப்பில் உள்ளவற்றையே சுட்டிக் காட்டி உள்ளது. இதில் புதிய அம்சம் எதுவும் இல்லை. மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக்காட்டுவது தான் கவனிக்க வேண்டியது.

உச்ச நீதிமன்றத்தில் பண மதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல வழக்குகள் இதுவரை பதில் இல்லாமல் நிலுவையில் உள்ளது. வரலாற்றில் இல்லாத பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாக கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன் வைத்துள்ளோம்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையிலான தீர்ப்புகள் வந்து கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் உள்ளது.

ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழையாக உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்து பரப்பப்பட்டது. திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே சட்டமன்றத்தில் பேசினேன்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/toEx8mg

Post a Comment

0 Comments