"மாற்றம் நம்மகிட்ட இருந்து வரணும்" - சொந்தச் செலவில் வகுப்பறையை மேம்படுத்திய ஆசிரியர்!

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியாற்றி வருபவர் சதிஷ்குமார். இவர் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதுடன், தான் பணிபுரியும் பள்ளியினை மேம்படுத்தும் முயற்சியினையும் மேற்கொள்கிறார். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமும், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமும் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்பனைக்காடு பள்ளிக்கு, ஜப்பான் நண்பர்கள் உதவியுடன், ஓர் அறக்கட்டளை மூலம் ரூ.75,000 நிதி உதவி பெற்றுக் கழிப்பறை, குடிநீர் வசதியினை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.

கை கழுவும் இடம்

இந்த நிலையில் இந்த வருடம் தனது பிறந்த நாளையொட்டி, முதல்கட்டமாக தனது வகுப்பறையை வண்ணம் தீட்டிப் புதுப்பொலிவு படுத்தியதுடன், கூடுதல் இருக்கைகள், ஸ்மார்ட் டிவி என தனது சொந்தப் பணம் ரூ.60,000 வரையிலும் செலவு செய்து வகுப்பறையை மேம்படுத்திக்கொடுத்து மாணவர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ஆசிரியர் சதீஸ்குமாரிடம் பேசினோம்,

"பொதுவாகவே வீட்டிற்கு அடுத்து, மாணவர்கள் வகுப்பறைகளில்தான் அதிக நேரம் இருக்கின்றனர். அந்த வகுப்பறைகள் பல்வேறு வசதிகளுடன் எப்போதும், புதுப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். தமிழகம் முழுவதும் வகுப்பறைகள் ஏராளம். அரசால் அனைத்தையும் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்துவது கடினம். அதே நேரத்தில், அந்தந்தப் பள்ளி ஆசிரியர்களும், அந்தந்த ஊர் மக்களும் நினைத்தால் மேம்படுத்த முடியும். ஊர்மக்கள் பள்ளிக்கு என்ன நன்கொடை கொடுத்தார்கள் என்பதற்கு முன்னால், நாம் இந்தப் பள்ளிக்கு என்ன செய்தோம் என்பதை யோசித்துப் பார்த்தேன்.

மேற்பனைக்காடு அரசு நடுநிலைப் பள்ளி

மாற்றம் என்னிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக, முதலில் எனது சொந்தச் செலவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிச் சுற்றுச்சுவர், பள்ளியின் கணினி அறை எனப் பலவற்றை வண்ணம் தீட்டிப் புதுப்பொலிவுபடுத்திக் கொடுத்தேன். தொடர்ந்து, தற்போது எனது வகுப்பினைப் புதுப்பொலிவாக்கி தேவையான சில வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறேன். இதைப் பார்த்த ஊர்மக்கள் பலரும், தற்போது தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்ய முன்வந்திருக்கின்றனர். முக்கியமாக, எங்கள் ஆசிரியர்கள் பலரும் தங்களால் முயன்றதைச் செய்வதாகக் கூறியிருக்கின்றனர். விரைவிலேயே எங்கள் பள்ளியின் அனைத்து வகுப்புகளும், இதுபோன்று புதுப்பொலிவுடன் மாறும்" என்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/0231gxJ

Post a Comment

0 Comments