`ஒரே வெட்டு… காலை உடைச்சி விடு’ - விவசாயி மீது கொலைவெறித் தாக்குதல்; அதிர்ச்சி வீடியோ -நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வாட்ஸ்-அப் குழுக்களில் நேற்று வெளியான வீடியோவை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். லாரி ஒன்றின் அருகில் தரையில் விழுந்து கிடக்கும் ஒரு நபரை அரிவாள், கட்டை உள்ளிட்டவைகளால் கொடூரமாக தாக்குகிறது அந்த கும்பல். உயிர் வலியுடன் துடிக்கும் அந்த முதியவர், ’சாமி விட்ருங்க.. சாமீ.. சாமீ…’ என்று அலறுகிறார். அதை காதில் வாங்கிக்கொள்ளாத அந்த கும்பல், ‘உன்னை அப்படியே விட்டால் சரிவராது. ஒரு காலை மட்டும் உடைச்சி விடு. ஏய் காலை தூக்கு. ஒரே வெட்டு’ என்று கூறிக்கொண்டே அவரது ஒரு காலை பிடிக்கிறது.

விவசாயி மீது கொலைவெறி தாக்குதல்

உடனே ‘வேணாம் சாமீ.. கால் ஏற்கெனவே உடைஞ்சிடுச்சி சாமீ..’ என்று உடலெங்கும் ரத்தம் வழிய அலறுகிறார் அந்த விவசாயி. தொடர்ந்து அந்த கும்பல் அவரது காலை கட்டையால் தாக்க, ‘அம்மா.. அம்மா..’ என்று அலறுகிறார். அப்போதும் அந்த கும்பல் நிற்காமல் ’விடாதே அடி.. விடாதே அடி..’ என்று கூறிக்கொண்டே தாக்குவதுடன் அந்த வீடியோ காட்சி முடிகிறது. ஒரு நிமிடம் இரண்டு விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சி பார்ப்பவர்கள்ளின் மனதை பதற வைக்கிறது.

அந்த வீடியோ காட்சிகளில் வரும் சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கினோம். கள்ளக்குறிச்சி மாவட்டம், எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சன் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஜெய்சன் தரப்பு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்காக ஜஸ்டின் தரப்பிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிந்ததும் அதை திருப்பித் தராமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி ஜெய்சனின் தந்தை வின்சென்ட் பால்ராஜ் என்பவர் வயலுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது ஜஸ்டின் உள்ளிட்ட அவரின் நண்பர்கள் அவரை வழிமறித்து பண விவகாரம் குறித்துப் பேசியிருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் வின்சென்ட் பால்ராஜை தாக்கியிருக்கிறது அந்த கும்பல். அதையடுத்து வின்சென்ட் பால்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்த இளவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீஸார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது வின்சென்ட் பால்ராஜை தாக்கியவர்கள் திருக்கோவிலூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார், வின்சென்ட் பால்ராஜை தாக்கிய ஜஸ்டின், அலெக்சாண்டர், ஜான் மனோஜ், அருள் ஆனந்தகுமார், ரசோரியா பிராங்கிளின், ஜான்சன், சைமன், ரூபன் லூர்துராஜ், ஆனந்த் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/TQd42ev

Post a Comment

0 Comments