விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரம் பகுதியில் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பாக பெருநாள் சந்திப்பு மற்றும் சமூக நல்லிணக்க பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து சமூக தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளார் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை சைவ மடங்கள்தான் பேசித் தீர்க்க வேண்டும். அப்போதுதான் இதற்கு நல்ல முடிவு வரும். இந்த விஷயத்தில் ஆரியர்கள், அந்நியர்கள் உள்ளே வரக்கூடாது. சைவ மடங்கள் இதை கேட்க வேண்டும். காலத்தின் மாற்றம் காரணமாக பல்லக்கை இறக்கி வைத்து பல காலம் ஆகிவிட்டது.
இனி பல்லக்கில் பவனி வருவது அந்தஸ்திற்கு அடையாளமல்ல, பல்லக்கில் பவனி வருவதனால் இந்து சைவ மதம் உயர்ந்துவிட போவதுமில்லை. அதை இறக்கி வைத்துவிட்டால் தாழ்ந்து விட போவதுமில்லை. இந்த விஷயத்தில் பெருந்தன்மையாக நடக்க வேண்டும். பெருந்தன்மையான முதல்வர் சைவ மடங்களை மட்டும் அழைத்து பேசினால் இந்த பிரச்னை தீரும்.
குன்றக்குடி அடிகளார் தலைமையில் கலைஞர் ஆட்சியில் இந்து பேரவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது மூடப்பட்டது. மீண்டும் இந்து பேரவையை கொண்டு வரவேண்டும். ஜீயருக்கும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் ஜீயர்கள் தலையிட்டு சைவ மடங்களை சீர் கெடுக்கக் கூடாது. உங்க வேலையை நீங்கள் பாருங்கள். பாரபட்சமின்றி இந்து தெய்வீக பேரவை உடனடியாக தமிழக முதல்வர் உருவாக்க வேண்டும்" என்றார்.
from Latest News https://ift.tt/w6nXej1
0 Comments