குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தயாராகும் பாஜக: நிதிஷ் குமாருடன் தர்மேந்திர பிரதான் முக்கிய ஆலோசனை!

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை இறுதியில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளன. இதையடுத்து குடியரசுத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க இப்போதே தயாராகிவிட்டது. முதலில் கூட்டணிக் கட்சிகளை தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இதற்காக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாட்னா வந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாஜக

இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது, நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த போதிலும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக வாக்களித்தார். தற்போதும் பா.ஜ.க தலைமை மீது நிதிஷ் குமார் கடும் அதிருப்தியில் இருக்கிறார். மாநில பா.ஜ.க தலைவர்கள் நிதிஷ் குமாரை மாற்றவேண்டும் என்று கோரி வருகின்றனர். இதனால் நிதிஷ் குமாரை முதலில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, துணை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகவும் இரு தலைவர்களும் விவாதித்தனர். துணை குடியரசுத் தலைவர் பதவியை நிதிஷ் குமாருக்கு கொடுப்பது குறித்து பா.ஜ.க பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நிதிஷ்குமார், தர்மேந்திர பிரதான்

பீகார் முதல்வர் பதவியை வாங்கிக்கொண்டு துணை குடியரசுத் தலைவர் பதவியை நிதிஷ் குமாருக்கு கொடுப்பது குறித்து பா.ஜ.க மேலிடம் பரிசீலிக்கிறது. இது தவிர இந்தச் சந்திப்பின் போது பீகாரில் காலியாகும் ராஜ்யசபா தேர்தல் குறித்தும், மாநில அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

தர்மேந்திர பிரதான் அடுத்ததாக ஒடிசா முதல்வர் மற்றும் ஆந்திர முதல்வரையும் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ள இருக்கிறார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.



from Latest News https://ift.tt/CT13v6h

Post a Comment

0 Comments