ஆஸ்திரேலியா: புதிய பிரதமரானார் அந்தோணி ஆல்பனிஸ்... இலங்கை குடும்பத்துக்கு மீண்டும் குடியுரிமை!

இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் முருகப்பன், பிரியா ஆகிய இருவரும் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தப்பித்து 2012-ம் ஆண்டு ஆள்கடத்தல் படகுகள் மூலம் தனித்தனியாக ஆஸ்திரேலியாவிற்கு வந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்தபிறகு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கோபிகா, தர்ணிகா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

நடேசலிங்கம் முருகப்பன் குடும்பம்

நடேசலிங்கம் முருகப்பன் 2014 முதல் ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் ஒரு இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்தார். பிரியாவின் `பிரிட்ஜ்ங் விசா' 2018 மார்ச் மாதம் காலாவதியானது. அதனால் நடேசலிங்கம் முருகப்பன் - பிரியா தம்பதியினர் ஆஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் தீவில் 2019-ம் ஆண்டு முதல் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பிரியா முருகப்பன் தம்பதியினர் ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் அகதிகளாக தங்களை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு நிரந்தர விசா வழங்குவதற்காக இந்த வழக்கில் அமைச்சரின் தலையீடு வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்தத் தம்பதியின் கோரிக்கையை பிரதமர் மோரிசன் அரசு மறுத்துவிட்டது. ஆனால், ஆஸ்திரேலிய மக்கள் இந்தக் குடும்பத்துக்கு பெரும் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து ”ஹோம் டு பிலோ” எனும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோபிகா - தர்ணிகா

நடேசலிங்கம் முருகப்பன் பிரியா தம்பதியினர் ஆஸ்திரேலியாவிலுள்ள பிலோலா-வில் மீண்டும் குடியேற அனுமதிக்கும் வகையில், அமைச்சரின் தலையீட்டின் மூலம் அந்த அவர்களுக்கு நிரந்தர விசா வழங்குவதாகத் தொழில் கட்சி தேர்தல் வாக்குறுதியளித்தது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி, தொழிலாளர் கட்சியிடம் தோல்வியைத் தழுவியது.

ஸ்காட் மோரிசன்

இருகட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களான லிபரல் கட்சியின் ஸ்காட் மோரிசனுக்கும், தொழிலாளர் கட்சியின் அந்தோணி ஆல்பனிஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தொழிலாளர் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அந்தோணி ஆல்பனிஸ் புதிய பிரதமராக தேர்வாகினார்.

இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி ஆல்பேன்ஸ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி, முருகன்-பிரியா தம்பதியினருக்கு மீண்டும் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்திருப்பதாக அந்த நாட்டின் ஊடகங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது.

புதிய பிரதமர் அந்தோணி ஆல்பேன்ஸ்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முன்னாள் பிரதமர் மோரிசன், ``பிரியா-நடேசலிங்கம் முருகப்பன் தம்பதியினர் விவகாரத்தில், அவர்களை ஆஸ்திரேலியாவில் வாழ குடியுரிமை அளிப்பது ஆள் கடத்தல்காரர்களுக்கும், கடலில் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கும் பச்சைக்கொடி காட்டுவது போல ஆகும்” எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்.



from Latest News https://ift.tt/nJ5b7hi

Post a Comment

0 Comments