ஆஸ்திரேலியாவின் 47-வது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய பிரதமர் மோரிசனின் லிபரல் மற்றும் தேசிய கூட்டணி, அந்தோணி ஆல்பனீஸின் தொழிலாளர் கட்சி, கிரீன்ஸ் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன.
151 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடைபெற்றத் தேர்தலில், 76 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியமைக்கும் என்ற நிலையில், அந்தோணி ஆல்பனீஸ் தலைமையிலான லேபர் கட்சி 72 இடங்களைப் பெற்று முன்னிலை வகித்தது.
இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்து விட்டதாக, பல லட்சம் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ``அரசியலில் எப்போதும் குழப்ப நிலை ஏற்படக் கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே, தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். நாடு இனி அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிக்கைக்குப் பின்பு தனது வெற்றியைப் பற்றிப் பேசிய அந்தோணி ஆல்பனீஸ், ``ஆஸ்திரேலியாவை புதுப்பிக்க எரிபொருள் துறையைப் பலப்படுத்த வேண்டும். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.
from Latest News https://ift.tt/92Tj8Wb
0 Comments