திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிரமாண்ட ஆழித்தேர், போலவே, இக்கோயிலின் கமலாலய குளம் புகழ்மிக்கது. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என புகழும் அளவுக்கு இக்குளம் பரந்து விரிந்தும் மிகவும் ஆழமாகவும் பிரமாண்டமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில்தான் இந்தாண்டு இதன் தேரோட்டம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி மிக சிறப்பாக நடைபெற்றது. ஆழித்தேரோட்டத்தைத் தொடர்ந்து இக்கோயிலின் கமலாலயக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த வழக்கத்தின்படி, மே 20-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்களுக்குத் தெப்ப உற்சவத் திருவிழா மிகவும் உற்சாகமாகவும் விமர்சையாகவும் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை இக்குளத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது,.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள கமலாலய குளத்தின் தெப்பத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளில், மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்தியிருந்தது. அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தயார் நிலையில் இருந்தனர். முதல் நாள் தெப்பத்திருவிழா திட்டமிட்டப்படி சிறப்பாக நடந்த நிலையில் இரண்டாம் நாள் சனிக்கிழமை அன்று, இக்குளத்தின் தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த 15 அடி உயரம் கொண்ட ஒரு அலங்கார தூண் சரிந்து விழுந்தது. நல்லவேளையாக தெப்பத்தின் மீது விழவில்லை இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் மூன்றாம் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து, இங்கு பலூன் விற்க வந்த வியாபாரியின் மகளான, முஸ்கான் என்ற சிறுமி, கமலாலகுளத்தில் இறங்கி குளித்து விட்டும் கரையேறிய போது, தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்திருக்கிறார். தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, முஸ்கானின் சடலத்தை மீட்டுள்ளார்கள்.
தெப்பத்திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சிறுமி முஸ்கான் குளத்தில் விழுந்து உயிரிழந்தது, பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்திய நிலையில் மேலும் ஒரு துயர சம்பவமாக திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் வெங்கடேசன் கமலாலய குளத்தில் நீச்சல் அடித்து இங்குள்ள நடுவாண் குளத்திற்கு செல்ல முயன்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் திருவாரூர் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/g8bKfVt
0 Comments