யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறைகளை தனியார்மயமாக்குவதற்கு முடிவெடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் மின் துறை தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி மின் துறையில் பணியாற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின் துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்துகளையும் கேட்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் போராட்டக்குழுவினர் அந்தக் கருத்துக்கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர் போராட்டக்குழுவினர். அதேசமயம் போராட்டத்தைத் தடுப்பதற்காக மின் துறையை தொழிலாளர் தாவா சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பணிகள் துறையாக அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மின் துறை தலைவர் சண்முகம் ஊழியர்களுக்கு வெளியிட்ட எச்சரிக்கை செய்திக்குறிப்பில், ``அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின்துறைகளின் செயல்திறன் மற்றும் நுகர்வோர் சேவையை மேம்படுத்த, மத்திய அரசு மின் துறைகளை தனியார்மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளது. மின் துறை ஊழியர்கள் அறிவித்துள்ள போராட்டம், பணி விதிகளுக்கு எதிரானது. எனவே, மின் ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பணி நடத்தை விதிகளின்படி, போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம், பணி இடைமுறிவாக கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் மின் துறை ஊழியர்கள் தனியார்மயத்தைக் கண்டித்து பிப்ரவரி 1-ம் தேதி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றிருந்தனர். அதையடுத்து அப்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய முதல்வர் ரங்கசாமி, மின் துறை அமைச்சர் நமச்சிவாயம், மின் துறை ஊழியர்கள், அரசியல்கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என்று உறுதியளித்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் வேலைநிறுதத போராட்டத்தை அப்போது நிறுத்தினர். ஆனால் தற்போது அரசு மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். நேற்று முதல் மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின் துறை தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடிய ஊழியர்கள், அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போராட்டக்குழு தலைவர் அருள்மொழி மற்றும் பொதுச்செயலாளர் வேல்முருகன், ”அரசு அளித்த வாக்குறுதியை மீறி மின் துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக அமைச்சரவை முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குகிறோம். அதேநேரத்தில் பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்குவோம். பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் எங்கள் போராட்டம் இருக்கும். பொறியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் தொடர்வார்கள்.
கூடுதல் பணிகளை பார்க்கமாட்டார்கள். எழுத்துப்பணிகளை முற்றிலுமாக தவிர்க்கிறோம். ஹெச்.டி மீட்டர் ரீடிங் எடுக்க மாட்டோம். புதிய மின் இணைப்பு தரமாட்டோம். அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் எங்களின் போராட்டம் தீவிரமடையும். போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்றனர். அதையடுத்து சத்தீஷ்கர் பல்கலைக்கழகத்துடன் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழகம் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியிடம், மின் துறை தனியார்மயமாவது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அந்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டு சென்றுவிட்டார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Aft6e2O
0 Comments