சரத் பவார் `ஊழல்வாதி' என சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்ட மராத்தி நடிகை கைது!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாசிக்கைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரை போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் மராத்தி நடிகை கேதகி சித்தலே என்பவர் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் சரத் பவாருக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். அந்த நடிகை, `சரத் பவார் ஒரு ஊழல்வாதி!' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நவிமும்பை கலம்பொலி போலீஸார் விசாரணைக்காக சித்தலேயை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் கூடிய தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் சித்தலே மீது மை வீசித்தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சித்தலேயிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு அவர் கைது செய்யப்பட்டார். சித்தலே மீது சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டதற்காக வழக்கு பதிவும் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா முழுவதும் சித்தலேயிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புனேயைச் சேர்ந்தவரான சித்தலே அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சரத் பவார்

இந்தி மற்றும் மராத்தி டிவி தொடர்களில் நடித்திருக்கும் இவர், கடந்த ஆண்டு சத்ரபதி சிவாஜியை சமூக வலைதளத்தில் மேற்கோள் காட்டி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், 24 மணி நேரத்தில் சரத் பவாருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக இரண்டு வழக்குகள் இவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. சரத் பவாருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருப்பதற்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ``சரத் பவாருடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை கொள்கைகளை கொண்டுதான் போராடவேண்டும். இது போன்று அவதூறாகப் பதிவிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.



from Latest News https://ift.tt/wPA1oQv

Post a Comment

0 Comments