மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ``இப்போது தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் தாவூத் பாஜக-வில் சேர்ந்துவிட்டால் ஒரே நாள் இரவில் புனிதராகிவிடுவார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அமைச்சராகவும் மாற்றுவார்கள். எனக்கு நிர்வாகம் செய்யத்தெரியாது என்று சொன்னார்கள். இப்போது எப்படி இந்த அரசு செயல்படுகிறது என்று கேட்கிறார்கள். எங்களது அரசு பதவியேற்றதிலிருந்து அரசு எப்போது கவிழும் என்று தேதி குறித்துக்கொண்டிருந்தார். மோடி ஜி ரேஷன் பொருள்கள் கொடுத்தார். ஆனால் அதனை சமைக்காமல் அப்படியேவா சாப்பிட முடியும். சிலிண்டர் விலை விண்ணை முட்டும் வகையில் இருந்தால் எப்படி சமைக்க முடியும். யாரும் பண வீக்கத்தை பற்றி பேச மறுக்கிறார்கள். இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். அவர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு முறை பெட்ரோல் விலையை வெறும் 7 பைசா அதிகரித்ததற்கு நாடாளுமன்றத்திற்கு வாஜ்பாய் மாட்டுவண்டியில் சென்றார். இப்போது எரிபொருள் விலையை பாருங்கள். வாஜ்பாய் காலத்தில் இருந்த பாஜக இப்போது இல்லை. பாஜக-வை விட சிவசேனாவின் இந்துத்துவா சிறந்தது. சில போலி இந்துத்துவவாதிகள் நாட்டை தவறான முறையில் வழி நடத்துகின்றனர். கோயில்களில் மணி அடிக்கும் இந்துக்கள் தேவையில்லை என்று பாலாசாஹேப் தாக்கரே எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்.
பயங்கரவாதிகளை முறியடிக்கக்கூடிய இந்துக்கள் வேண்டும். இந்துத்துவாவிற்காக என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள். பாபர் மசூதியைக்கூட நீங்கள் இடிக்கவில்லை. சிவசேனா தொண்டர்கள் அதனை செய்தனர். எங்களது நரம்புகளில் இந்துத்துவா ரத்தம் ஓடுகிறது. எங்களுடன் போட்டியிடவேண்டும் என்று நினைக்காதீர்கள். எங்களது இந்துத்துவாவை முடிவு செய்ய நீங்கள் யார்? காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதால் எங்களது இந்துத்துவா கொள்கை குறைந்துவிடுமா? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரும் அனைத்து கட்சிகளும் இந்துத்துவா கட்சிகளா? ஒலிபெருக்கி விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என்ன சொன்னார் என்று கேள்வி எழுப்பினார்.
தேவேந்திர பட்நவிஸ் அவர்களின் இந்துத்துவா குறித்து பேசுகிறார். அதனால் நாங்கள் அவர்களை வெளியில் தள்ளிவிட்டுவிட்டோம். அவர்கள் தான் இந்துத்துவாவின் பாதுகாவலர்கள் என்று நினைக்கிறார்கள். பால்தாக்கரேயின் கொள்கையில் இருந்து சிவசேனா விலகிவிட்டதாக காட்ட பல முறை முயற்சி நடந்தது. ஆனால் நாங்கள் பால்தாக்கரேயின் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவுபடுத்தினோம். உங்களது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் எனது தாத்தா சம்யுக்த மகாராஷ்டிரா கோரிக்கையை உருவாக்கினார். காஷ்மீரில் அரசு அலுவலகத்தில் காஷ்மீர் பண்டிட் ராகுல் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தீவிரவாதிகள் வந்து கொலை செய்துவிட்டு செல்கின்றனர். நீங்கள் ஹனுமான் பாடலா பாடினீர்கள். கொள்கைக்கு தொடர்பில்லாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததை பாஜக தலைவர் விமர்சிக்கிறார். நாங்கள் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்தோம். ஆனால் நீங்கள் அதிகாலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்ததை என்ன சொல்வது. நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்தோம். ஆனால் அவர்கள் உங்களுடன் இருந்தார்களா?" என்று பாஜகவை காட்டமாக விமர்சித்தார்.
from Latest News https://ift.tt/QyxehwG
0 Comments