தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தது. தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், வடசென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசினர். நீட் தேர்வு இருக்காது, மகளிருக்கு மாதம் ரூ.1000 என பல வாக்குறுதிகளை அளித்தனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். இந்த ஆட்சி நம்பிக்கை மோசடி செய்ததாக மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். 2024 லோக்சபா தேர்தலில் இதெல்லாம் வெளிப்படும். பகுத்தறிவு கொள்கையில் வந்தவர்கள், தந்தை பெரியாரின் பாதையில் வந்தவர்கள் என கூறிக்கொள்ளும் திமுக பௌர்ணமி நாளில் ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது" என்றார்.
from Latest News https://ift.tt/8I3fWYU
0 Comments