கோவை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 87 வயதாகும் கமலாத்தாள் பாட்டி, இப்போதும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். இன்று, நேற்று அல்ல.. யாருடைய தயவும் இல்லாமல் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மாவு அரைப்பது, சட்னி, சாம்பார் வைப்பது என்று கமலாத்தாள் இட்லி கடையில் எல்லாமே அவரது கை வண்ணம் தான். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார்.
பிறகு 50 பைசாவுக்கு மாறி, தற்போது ரூ.1-க்கு விற்று வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சமைப்பதற்கு கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் என்ற எந்த வசதியும் கிடையாது. விறகு அடுப்பும், ஆட்டுக் கல்லும் தான் கமலாத்தாள் பாட்டி கடையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாத்தாள் குறித்து வெளி உலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து உதவிக் கரங்கள் நீண்டு வருகின்றன.
கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர்கள் உதவியாக வந்தன. முக்கியமாக, மகேந்திரா குழுமத்தின் ஆனந்த் மகேந்திரா பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக கடந்தாண்டே, ரூ .2.5 லட்ச மதிப்பில் 1.75 சென்ட் நிலம் வாங்கி கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து அவரிடம் ஒப்படைத்தனர்.
அதே போல அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி 1.75 சென்ட் இடத்தை கமலாத்தாள் பாட்டிக்கு பதிவு செய்து கொடுத்தார். மொத்தம் 3.5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.
பணிகள் முழுமையாக முடிந்ததால், அன்னையர் தினமான நேற்று வீட்டை கமலாத்தாள் பாட்டியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கமலாத்தாள் பாட்டி கூறுகையில், “என் குடிசைக்கு வந்தவங்கக் கிட்ட வீடு கட்டி கொடுங்கனு கெஞ்சினேன். ஆனந்த் மகேந்திரா கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாங்க
சொன்ன மாதிரியே இப்ப வீடு கட்டி கொடுத்துட்டாங்க. ஆனந்த் மகேந்திரா சாருக்கு நன்றி. நீங்க நல்லாருக்கனும். நீங்களும், உங்கக் குடும்பமும் 100 வருஷத்துக்கு நல்லாருக்கனும் .” என்றார்.
from Latest News https://ift.tt/6seqpAI
0 Comments