``வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால்..!" - வணிகர் மாநாட்டில் ஸ்டாலின்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 39-வது வணிகர் தினத்தையொட்டி நேற்று ‘தமிழக வணிகர் விடியல் மாநாடு’ திருச்சி சமயபுரம் அருகே நடைபெற்றது. காலையில் சட்டமன்றத்திற்குச் சென்று கேள்வி நேர நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மூலமாக திருச்சிக்கு வந்தார். மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளம் தொழில் முனைவோர் என்கின்ற புதிய அமைப்பையும், வணிகர்களுக்காக ‘வணிகர் டிவி’ என்கிற தொலைக்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார்.

வணிகர் டிவியை அறிமுகப்படும் முதல்வர்

மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திருச்சின்னா எப்போதுமே தி.மு.க.,வுக்கு திருப்புமுனை. அதேபோல வணிகர்களுக்கு இந்த மாநாடு நிச்சயமாக ஒரு திருப்புமுனையை உருவாக்கும். 1982-ம் ஆண்டு அ.தி.மு.க., அரசு நுழைவு வரி சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை எதிர்த்து, மே 5-ம் தேதி சேலத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. சென்னையிலும் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில் வணிகர்கள் பலர் தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி வணிகர்கள் சிறை செய்யப்பட்ட தினமான மே 5-ஐ தான் வணிகர் தினமாகக் கொண்டாடுகிறீர்கள். இப்போது நடப்பது நம்முடைய ஆட்சி. தி.மு.க., ஆட்சி எப்போதுமே வணிகர்களின் நலனை பேணக்கூடிய ஆட்சியாகத் தான் இருந்திருக்கிறது. 1989-ம் ஆண்டு தலைவர் கலைஞர் தான் வணிகர் நல வாரியம் கொண்டு வந்தார். அதேபோல, பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களை அழைத்துப் பேசி கருத்துகளைக் கேட்கும் முறையையும் தலைவர் கலைஞர் கொண்டு வந்தார். இப்போதும் அதைப் பின்பற்றி தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

வணிகர்களுக்கு எந்தவித தொல்லையும் இருக்ககூடாது என்பது குறித்து தமிழக டி.ஜி.பி-யிடம் ஆலோசனை செய்தேன். அதில் காவல் உதவி செயலியில், வணிகர்களுக்கான தனி பகுதியையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறோம். வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால், அந்த செயலியின் வழியாக புகார் அளித்தால் போலீஸார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பார்கள். ஓரிரு வாரத்தில் இது செயல்பாட்டிற்கு வரும். வணிகர் நல வாரியத்தை செயல்படுத்த உங்களில் இருந்து புதிய உறுப்பினர்களை நியமிக்க உள்ளேன். அதேபோல வணிகர் குடும்ப நல உதவித்தொகையை ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். உடற்பயிற்சிக் கூடங்கள் தொடங்க இனி போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.

மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

இந்த அரசை ஏதேதோ சொல்லி களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். திட்டமிட்டு பரப்பும் அவதூறுகளுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கின்ற திராவிட மாடலில் நடைபெறக்கூடிய ஆட்சி. பெரிய நிறுவனங்கள் வளர்வதை மட்டுமே பொருளாதார வளர்ச்சி என நான் நினைக்கவில்லை. மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், சிறு வணிகர்களும் வளர வேண்டும். ஆற்றல் மிக்க மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும். வணிகர்கள் நாள்தோறும் மக்களைச் சந்திக்கிறீர்கள். இந்த அரசினுடைய நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் தூதுவர்களாக நீங்கள் செயல்பட வேண்டும். நல்ல யோசனை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், அதை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார்.



from Latest News https://ift.tt/CpBbeXR

Post a Comment

0 Comments