மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2024-ல் நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் கூட்டணி வைக்கலாம் என்று மம்தா கூறினாலும், மேற்கு வங்கத்தில் என்னவோ காங்கிரஸும், திரிணாமுல் காங்கிரஸும் எதிரெதிராகவே இருக்கின்றன. இதற்கேற்றார் போல, மேற்கு வங்க அரசு பால் நிறுவனத்தின் பங்குகளைத் தனியார் நிறுவனத்துக்கு விற்பதை எதிர்த்து, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அரசு பால் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவிருக்கும் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான, ப.சிதம்பரம் வழக்கறிஞராக ஆஜரானதைக் கண்டு காங்கிரஸார் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த காங்கிரஸுக்கு ஆதரவான வழக்கறிஞர்கள், ``ப.சிதம்பரம் கட்சியின் உணர்வுகளுடன் விளையாடுகிறார். இதுபோன்ற தலைமைதான் மேற்குவங்கத்தில் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம். இங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள்" என சிதம்பரத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியதையடுத்து அந்தப் பகுதியே சற்று பரபரப்பானது.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய சிதம்பரம், ``இது ஒரு சுதந்திர நாடு. இந்தச் சம்பவம் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. இதற்கு நான் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
மேலும் இதுகுறித்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர் சவுத்ரி, ``இது ஒரு தொழில்முறை உலகம். இதுதொடர்பாக யாரும் அவருக்கு ஆணையிட முடியாது" எனக் கூறினார்.
from Latest News https://ift.tt/kbt73FZ
0 Comments