ஊழியரை உதைத்த அதிகாரி... சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சர்ச்சை

தமிழக அரசு முத்திரைச் சின்னமாகவும் 108 வைணவத் தலங்களில் மிக முக்கியத் தலமாகவும் கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். மிகவும் பழைமை வாய்ந்த இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டாள் கோயிலில் கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக செயல் அலுவலர் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

எட்டி உதைக்கும் சி.சி.டி.வி.காட்சி

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவில் வசித்து வரும் கர்ணன் என்பவர், ஆண்டாள் கோயிலில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக காவலாளியாக பணியாற்றி வருகிறார். காவலாளி கர்ணனனுக்கு, செயல் அலுவலர் மற்றும் ஒருசில அதிகாரிகள் கடுமையான பணிச்சுமைத் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கோயிலில் பணியில் இருக்கும் காவலாளி கர்ணனனை, அலுவலகத்தின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சேர்-ஐ எடுத்துச்செல்ல அதிகாரிகள்‌ பணிப்பதும், அப்போது அவரை கோயில் கணக்கர்‌ பின்னிருந்து காலால் எட்டி உதைப்பதுமான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

கர்ணன்

உடல்நலக் குறைபாடுள்ள கர்ணனனுக்கு, அதிகாரிகள் அளிக்கும் பணிச்சுமை மிகுந்த மனஉளச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு உடல்ரீதியான பிரச்னைகள் இருப்பதை செயல் அலுவலரிடம் தெரிவித்தும் வேண்டுமென்றே கர்ணனனுக்கு இரவுப்பணி வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட கர்ணன் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், பணிநேரத்தில் வேலையாள்களை, அதிகாரிகள் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும் பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்கு பயந்துகொண்டு இதை வெளியில் சொல்லாமல் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

செயல் அலுவலர், பணியாளர்கள் முன்னிலையில் கோயில் கணக்கர், காவலாளி கர்ணனனை எட்டி உதைக்கும்போது கணக்கரை கண்டிக்காமல் மற்றவர்களும் அவரின் செயலை வேடிக்கைப் பார்ப்பதும் சிரிப்பதுமான செயல் கோயிலுக்குள்ளேயே தீண்டாமையை விதைப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ணன்

இந்தசம்பவம் குறித்து விளக்கம்பெற கோயில் அலுவலகத்தை பலமுறை தொடர்புக்கொண்டோம். ஆனால், யாரும் பதிலளித்து பேசவில்லை. அவர்கள் விளக்கம் தரும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப்பின் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்!



from Latest News https://ift.tt/JoSFfTm

Post a Comment

0 Comments