இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ தக்காளியின் விலை 7 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. உணவு தயாரிக்க அத்தியாவசிய தேவையான தக்காளியின் விலை பலரையும் வாயடைக்க செய்துள்ளது.
''கோயம்பேடு சந்தைக்குத் தினமும் 60 லாரிகளில் 7 முதல் 8 டன்கள் வரை தக்காளி வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது 40 லாரிக்கும் குறைவாகவே தக்காளி வருகிறது. தினசரி தக்காளி தேவையானது 400 டன்களாக இருக்கும் நிலையில், வெறும் 250 டன் மட்டுமே கிடைக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கடுமையாக குறைந்ததால், பல சிறு விவசாயிகளால் அடுத்த முறை பயிரை பயிரிட போதுமான லாபத்தை ஈட்ட முடியவில்லை.
எனவே மீண்டும் தக்காளி அறுவடைக்கு இரண்டு மாதங்கள் வரை ஆகும் என்பதால் ஜூலை மாதம் இறுதி வரை தக்காளியின் விலை குறைய வாய்ப்பில்லை'' என்று தெரிவித்திருக்கிறார் விவசாயிகள் சங்க தலைவர் சந்திரன்.
தக்காளியின் விலை உயர்வு குறித்து கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பின் ஆலோசகர் சௌந்தராஜனிடம் பேசியபோது, "தக்காளியின் விலை உயர்வுக்கு முதல் காரணம் மழை பெய்து பயிர்களில் அழிவை ஏற்படுத்தியது. இரண்டாவது 20 சதவிகித லாரி வாடகை கூடியது. இதனால் தக்காளியின் விலை தமிழகம் முழுவதும் சுமார் 70 - 90 ரூபாய் வரை விற்பனையாகிறது. எனவே அடுத்த அறுவடையின் போது தக்காளியின் விலை குறையும்.
ஹைதராபாத், டெல்லி போன்ற மாநிலங்கள் அங்கேயே விளைவித்து அங்கேயே வாங்கி கொள்கின்றன. சென்னை ஒரு நுகர்வோர் நகரம் என்பதால் இங்கு காய்கறிகள் விளைவது ஒரு 10 சதவிகிதம் கூட கிடையாது. வெளிமாநிலத்தில் இருந்தே வருவிக்க வேண்டி உள்ளது. அதிகமான விலையினால் மக்கள் தக்காளியை வாங்க யோசிக்கிறார்கள்.
தக்காளி விலை உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும் உருளைக்கிழங்கு விலை 20 ரூபாய்தான். அதேசமயம் வெண்டைக்காய் 40 ரூபாய், கொத்தவரங்காய் 30 ரூபாய், புடலங்காய் 20 ரூபாய், வாழைக்காய் 10 ரூபாய், சுரைக்காய் 10 ரூபாய், இஞ்சி 60 ரூபாய் என பல காய்கறிகளின் விலை கூடிக் கொண்டே இருக்கிறது" என்றார்.
from Latest News https://ift.tt/6CwrlGJ
0 Comments