நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் திருப்பதியில் நடக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்கான வழிப்பாட்டு ஸ்தலமாகக் கூறப்படும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயிலிலும் இருவரும் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் உள்ள மேலவழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் என்ற கோயில் உள்ளது. இக்கோயில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வக் கோயில் எனச் சொல்லப்படுகிறது. அங்கு இருவரும் ஒன்றாக வந்து பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
இது குறித்து மேலவழுத்தூர் பகுதியினரிடம் பேசினோம், "நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் ஒருவருக்கொருவர் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. பல முக்கிய கோயில்களுக்கு இருவரும் ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாபநாசம் பகுதியில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு இருவரும் ஒன்றாக வந்தனர்.
நயன்தாரா வந்திருக்கும் செய்தியறிந்து ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் கோயிலில் முன் திரண்டனர். அனைவரும் நயன்தாராவை பார்த்து விசிலடித்து கொண்டாடினர். `என்னா கலரா இருக்காங்க' பெண்கள் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டனர். கூட்டம் கூடியதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு போலீஸார் வந்தனர். ஊர் மக்களிடம் சகஜமாக சிரித்து பேசியபடியே இருந்தார் நயன்தாரா.
இதையடுத்து அடுப்பில் பொங்கல் பானையை வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. அதனை பெண் ஒருவர் தீ மூட்டி எரித்து கொண்டிருந்தார். பின்னர் பொங்கல் பானையில் அரிசியை அள்ளிப் போட்டார் நயன்தாரா. அப்போது சுற்றி நின்றவர்கள் குலவையிட்டனர். பிறகு பாத்திரத்தில் இருந்த சர்க்கரையினை விக்னேஷ் சிவன் எடுத்து பொங்கல் பானையில் இட, நயன்தாரா பானையை பொங்கலைத் தயாரித்தார். அப்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் சர்க்கரையைக் கொடுத்து, "நாம மகிழ்ச்சியா இருக்கணும்னு" வேண்டிக்கிட்டு நீயும் இனிப்பைப் போடுனு சொல்ல சிரித்தபடியே சர்க்கரையை வாங்கிப் பானைக்குள் போட்டார்.
இதையடுத்து அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பொங்கல் படையலிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டது. இருவரும் ஒன்றாக சாமி தரிசனம் செய்தனர். கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இருவரும் கோயிலில் இருந்தனர். நயன் தாராவுடன் செல்பி எடுக்கவும், போட்டோ எடுக்கவும் பலர் கூடியிருக்கின்றனர். உடன் வந்தவர்கள் இருவரையும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் கும்பகோணம் சென்றதுடன் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிப்பட்டனர். விக்னேஷ் சிவன்,நயன்தாரா இருவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதியில் தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.
ஆதிகும்பேஸ்வரன் கோயில்,பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை தரக்கூடியது. கணவன்,மனைவி இடையே சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான வழிப்பாட்டு ஸ்தலம் என்பது ஐதீகம். இங்கு வந்து வழிப்பட்டால் தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். அத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருந்து சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/HwokWCj
0 Comments