பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம்; இளைஞர் தற்கொலை - தேடப்பட்டு வந்த கிராம மேற்பார்வையாளர் கைது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுதக்குடி கிராமத்தில் தனது குடும்பத்தினரும் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் மணிகண்டன். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இவருக்கு முறையான அனுமதி கிடைத்தது. ஆனால் இதற்கான தவணை தொகையை வழங்க கிராம மேற்பார்வையாளர், தொடர்ச்சியாக லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்ததால், இரு தினங்களுக்கு முன்பு மணிகண்டன், தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. லஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மீது காவல்நிலையத்தில் வழக்கு் பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவானார். தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ்வரன்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அனுமதி கிடைத்தததால், இதற்கான கட்டுமான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் தொடங்கினார். முதல் தவணைக்கான நிதியை வழங்க, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் கிராம மேற்பார்வையாளர் மகேஷ்வரன், மணிகண்டனிடம் மூவாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளதாக சொல்லப்ப்டுகிறது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த மணிகண்டன் மிகவும் சிரமப்பட்டு மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதனை மகேஷ்வரனிடம் கொடுத்துள்ளாராம். அடுத்தக்கட்டமாக, கீழ்த்தளம் மேலும் ரெண்டல் ஆகியவற்றை கட்டியவுடன் இரண்டாவது தவணைக்கான பணத்தை வழங்க, கிராம மேற்பார்வையாளர் மகேஷ்வரன் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணத்தை மணிகண்டன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் வீடு கட்டுமானத்திற்கான அடுத்தக்கட்ட பணிகளுக்கு பணம் தேவைப்பட்டதால் மிகுந்த உளைச்சல் அடைந்திருக்கிறார் மணிகண்டன். 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தும் கூட, இரண்டாம் கட்ட தவணைக்கான பணம் கிடைக்கவில்லை. சில நாள்களில் வந்து விடும் என மணிகண்டனிடம், கிராம மேற்பார்வையாளர் மகேஷ்வரன் தெரிவித்திருக்கிறார். ஆனால் பல நாள்கள் ஆகியும் பணம் வரவில்லை. அதன் பிறகு மணிகண்டனுக்கு, மகேஷ்வரன் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியை பெற, லஞ்சம் கொடுப்பதற்காக, மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாலும், வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாலும் மணிகண்டன் மிகுந்த மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி கொல்லி மருத்தை குடித்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் இறப்பதற்கு முன்பு, தனது மன வேதனையையும் தனது தற்கொலைக்கான காரணத்தையும் வீடியோவாக பேசி வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக லஞ்சம் குற்றச்சாட்டுக்கு ஆளான கிராம மேற்பார்வையாளரை, சஸ்பெண்ட் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். இவருக்கு நேர்ந்த துயரம் குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்பு ராமதாஸ், `லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, மணிகண்டனின் வீட்டுக்கு சென்று, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, மணிகண்டனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என தெரிவித்திருந்தார். இதற்கிடையே மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மகேஷ்வரன் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மகேஷ்வரன் தலைமறைவாக இருந்தார். இவரை பிடிக்க திருவாரூர் மாவட்ட காவல்துறை, தனிப்படைகள் அமைத்து தேடியது. . இந்நிலையில்தான் தற்போது மகேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/v3niazb

Post a Comment

0 Comments