தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் முடிந்த பிறகு நடந்த விவாதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பேசும்போது, "கன்னியாகுமரிமாவட்டம் விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தொகுதி வழியாக பயணிக்கும் நெய்யாறு இடதுகரை கால்வாய் காமராஜர் காலத்தில் வெட்டப்பட்டது. நெய்யாற்றின் கால்வாய் வழியாக 39 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன, கால்வாய் தூர்வாரப்படவில்லை. கேரளாவில் இருந்து 14 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்படாத நிலை உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நிதி ஒதுக்கவேண்டும். நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்சினை தொடர்பாக கேரள அரசுடன் பேச மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும். கேரளாவுடன் சுமூகமாக பேசி தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார். அதற்கு பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "கால்வாயை தூர்வார வேண்டும் என்கிறார். தண்ணீர் வராத கால்வாயை தூர்வாரினால் என்ன, வாராவிட்டால் என்ன? அப்புறம் பார்க்கலாம்" என பேசியுள்ளார். அமைச்சர் துரைமுருகனின் பேச்சு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவோடு முல்லைப்பெரியாறு பிரச்னை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னை. தேர்தல் சமயத்தில் அனைத்து கட்சியினரின் தேர்தல் வாக்குறுதியிலும் நெய்யாறு இடதுகரை கால்வாய் விவகாரம் இடம்பெற்றிருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நெய்யாறு இடதுகரை கால்வாய் தூர்வாரப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், இன்று தி.மு.க அமைச்சர் துரைமுருகன் தண்ணீர் வராத சானலை எதற்காக தூர்வாரவேண்டும் என கேட்டிருப்பது குமரி மாவட்ட மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள எல்லையான பாறசாலை சுந்தரிமுக்கு பகுதியில் உள்ள இடதுகரை கால்வாய் ஷட்டரை 14 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாநில அரசு அடைத்து. அதனால் இடதுகரை சானலில் தண்ணீர் வராததுடன் கன்னியாகுமரி மாவட்டப்பகுதியில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புக்குள்ளானது. பல இடங்களில் மண் சரிந்து விழுந்து கால்வாய் மூடிவிட்டது. நெய்யாறு இடதுகரை கால்வாயில்(சானலில்) கேரளா தண்ணீர் விட்டாலும் தமிழகத்தை வந்து சேரமுடியாத நிலைதான் உள்ளது. இப்போதே கால்வாயின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால் கால்வாயைக் காணவில்லை என புகார் கொடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிடும்.
நெய்யாறுக்காக தொடர் போராட்டங்கள் நடத்திவரும் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் கே.ஜி.ரமேஷ்குமாரிடம் பேசினோம், "கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு முன்பே நெய்யாற்றின்கரை மற்றும் விளவங்கோடு தாலுகாக்களில் விவசாயம் செய்வதற்காக நெய்யாறு அணை கட்டப்பட்டது. நெய்யாறு அணை கேரளாவில் இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் களியல் அணைமுகம், கருப்பையாறு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து செல்லும் தண்ணீரால் அணையின் 40 சதவிகிதம் நிரம்புகிறது. மொத்தம் 84.75 அடி உயரம் கொள்ளளவு கொண்ட நெய்யாறு அணையில் இருந்து இடதுகரை கால்வாய் (சானல்) மூலம் விளவங்கோடு தாலுகா பகுதியில் விவசாயத்துக்காக தேவையான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என காமராஜர் ஆட்சிகாலத்தில் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.
22.347 கிலோ மீட்டர் நீளம்கொண்ட நெய்யாறு இடதுகரை கால்வாய் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தண்ணீர் வந்தது. 2004-ம் ஆண்டு சுந்தரி முக்கு பகுதியில் ஷட்டரை மூடி பூட்டுபோட்டுவிட்டது கேரளா அரசு. சுந்தரிமுக்கு பகுதிக்கு தண்ணீர் செல்வதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் பாய்ந்து செல்கிறது இடதுகரை கால்வாய். அந்தக் கால்வாயில் அடைப்பு ஏற்படுத்தினால் கேரளாவின் சில பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்படும். இதை எல்லாம் முன்வைத்து கேரளாவுடன் பேசி நெய்யார் அணை தண்ணீரை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு குமரி மாவட்ட மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக தண்ணீர் வராத கால்வாயை ஏன் தூர்வார வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கிண்டலடித்திருப்பது கண்டிக்கத்தக்கது" என்றார்.
இதுகுறித்து குமரிமாவட்ட பாசன அமைப்பின் தலைவர் வின்ஸ் ஆன்றோ , "தண்ணீர் வராத கால்வாயை மக்கள் மூடிக்கொள்ளலாம் என்ற நிலையை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உண்மை நிலையை முழுமையாக எடுத்துக்கூறி இடதுகரை கால்வாயை மீட்பதற்கும், மாற்றுத்திட்டங்களை அரசுக்கு வலியுறுத்த தவறிய விஜயதரணி எம்.எல்.ஏ-வின் செயலும் கண்டிக்கத்தக்கது. தூர்வாரவேண்டும் என்றும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் விஜயதரணி கோரிக்கை வைத்தார். தூர்வாராவிட்டாலும், ஆக்கிரமிப்பை அகற்றியே தீருவோம் என்றாவது அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருக்க வேண்டும். பலர் வீடுகளுக்குச் செல்ல பாலம் போடுவதற்கு பதில் பிரதான கால்வாய்களில் மண்ணை நிரப்பி பாதை அமைத்திருக்கிறார்கள். கால்வாய்க்குள் மண் நிரப்பி வாழை, கீரை உள்பட பயிர்களை நட்டு விவசாயம் செய்தும் வருகின்றனர். கிளை கால்வாய்கள் பலவற்றையும் ஆக்கிரமித்து தோப்புக்களுடன் இணைத்துவிட்டனர். மடைகள் உள்பட சிதைந்துகிடக்கும் கட்டுமானங்களை சீரமைத்து ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி கால்வாயை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும், முல்லை ஆற்றில் பல்லிக்கூட்டம் பகுதியில் நெய்யாறு இடதுகரை கால்வாய்க்கு தண்ணீர் வழங்குவது. திற்பரப்பு அருவியில் இருந்து பைப் லைன் மூலம் இடதுகரை சானலுக்கு தண்ணீர் விடுவது. அல்லது மலைப்பகுதியில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை நெய்யாறு இடதுகரை கால்வாய்க்கு திருப்பி விடுவதுபோன்ற அரசு மட்டத்தில் நிலுவையில் உள்ள மாற்றுத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதுபற்றி விஜயதரணி எம்.எல்.ஏ-விடம் பேசினேன், "நெய்யாறுதான் விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளுக்கு நீராதாரம். ஒருபக்கம் வழக்கு இருந்தாலும் மறுபக்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்காக நான், கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், மாவட்ட அமைச்சர் மனோதங்கராஜ், எம்.பி விஜய் வசந்த் ஆகியோர் அடங்கிய குழு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறேன். இதை அரசு பரிசீலிக்க வேண்டும். விரைவில் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூர்வாரினால் மழை நேரத்தில் நிலத்தடி நீரை பெருக்கும் தண்ணீர் பிடிப்பு பகுதியாக மாறும். இப்போது கால்வாயை தூர்வாரினால்தான் எதிர்காலத்தில் தண்ணீர் பெறும்போது காய்வாய் இருக்கும். இல்லை என்றால் கால்வாய் மூடப்பட்டுவிடும் என்பதற்காகத்தான் கோரிக்கை வைத்தேன்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Mvnx6qV
0 Comments