மணமேல்குடி அருகே கடற்கரையொட்டி இருக்கிறது, அம்மாபட்டினம் கிராம். இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அம்மாபட்டினம் கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1984-ல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுகொண்ட மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டி அம்மாபட்டினம் அரசு ஆண்கள் நடு நிலைப்பள்ளி அருகே கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இந்தத் தொட்டியிலிருந்து அம்மாபட்டினம் பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே மூன்று இடங்களில் புதிதாக மேல்நிலைத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும், இந்தத் தொட்டி இடித்து அகற்றப்படவில்லை.
கடந்த 37 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத் தொட்டியின்
சிமென்ட் தூண்களில் விரிசல் ஏற்பட்டதோடு, சில இடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன.எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருந்தது.
"ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுகொண்ட பெரிய தொட்டி, இது விழுந்தா அருகிலேயே இருக்கும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு சுற்றிலும் உள்ள மக்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கிடையே, அந்த தொட்டியில் முழவதும் தண்ணீர் ஏற்றி எங்களுக்கு பீதியை கிளப்புகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை, ஏற்படுத்தும் வகையிலான இந்தத் தொட்டியை விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு இடித்து அகற்ற வேண்டும்" என்று அம்மாபட்டினம் பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து முதன்முதலில் விகடன் இணையதளத்தில், கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதோடு, அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். முதலில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தால், குடிநீர்த் தொட்டி பத்திரமாக இடித்து அகற்றப்பட்டிருக்கிறது. தற்போது அம்மாபட்டினம் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். குடிநீர்த் தொட்டி இடித்து அகற்ற தூண்டுகோலாக இருந்த விகடனுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அம்மாபட்டினம் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய அம்மாபட்டினம் கிராம மக்களிடம் பேசினோம். "இந்தத் தொட்டியைச் சுத்திலும் ஒருபக்கம் அரசு ஆண்கள் பள்ளி கட்டடம், மற்றொரு பக்கம் அங்கன்வாடிக் கட்டடம், நூலகம், ரேஷன்கடைன்னு இருக்கு. இந்தத் தொட்டி விழுந்தா சுற்றிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்னு தான் தொடர்ச்சியா போராடிக்கிட்டு இருந்தோம். இந்த மாசத்துக்குள்ள அரசு இடிச்சு அகற்றலைன்னா, என்ன நடந்தாலும் பரவாயில்லைன்னு, பொதுமக்கள் நாங்களே எல்லாரும் ஒண்ணு சேர்ந்து இடித்து அகற்றலாம்னு இருந்தோம். ஆனா, அதிகாரிங்களே இடிச்சி அகற்றிட்டாங்க. இந்தத் தொட்டியை இடித்து அகற்ற தூண்டுகோலாக இருந்த விகடனுக்கும்,மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம். இப்பதான் எங்களுக்கு நிம்மதியே வந்திருக்கு" என்றனர்.
from Latest News https://ift.tt/HTLaz5B
0 Comments