Doctor Vikatan: மாதத்தில் இருமுறை பீரியட்ஸ்; PCOD பிரச்னையும் உள்ளது; தீர்வு உண்டா?

என் வயது 30, நான் இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு டீன்ஏஜில் இருந்தே பிசிஓடி (PCOD) பிரச்னை இருந்தது. பிசிஓடிக்கும், குழந்தையின்மைக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகுதான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் முறையற்ற மாதவிடாய் இருந்தது. நான் எந்த மருத்துவ சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. இரவில் 2 பேரீச்சம் பழம் மட்டும் எடுத்துக்கொண்டேன். கடந்த இரு மாதங்களாக எனக்கு பாலாடை போல் வெள்ளைப் படுதல் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் எனக்கு 3 முறை மாதவிடாய் வந்தது. ரத்தப்போக்கு வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. இதற்கு என்ன காரணம் ?

- அஷ்மிதா (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் கார்த்திகா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.

``பிசிஓடி அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் என்பது சினைப்பை நீர்க்கட்டிகளைக் குறிக்கும் பிரச்னை. அது வளர்சிதை மாற்றத்தோடு தொடர்புடைய ஒரு பிரச்னை.

ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன்தான் இன்சுலின். அது சரியாகச் சுரக்காத நிலையை `இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' என்று சொல்வோம். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும், உடல்பருமன் அதிகமுள்ளோருக்கு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பிசிஓடி பிரச்னை வரலாம். பிசிஓடி பாதிப்புள்ள பெண்களுக்கு மாதவிடாய் முறையற்று வரும். கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கும்.

பிசிஓடி பிரச்னைக்கு முதல் அறிவுரை எடையைக் குறைப்பதுதான். இரவில் 8 மணி நேரம் தூங்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமலிருப்பது, உடற்பயிற்சிகள் போன்றவை முக்கியம். தினமும் உடற்பயிற்சிகள் செய்வோருக்கு இன்சுலின் சுரப்பில் பிரச்னைகள் வராமலிருப்பதால் பிசிஓடி பாதிப்பைக் கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கும்.

மூன்று மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் தானாக வருகிறது, அதில் பெரிய தொந்தரவுகள் இல்லை, அதாவது ரத்தப்போக்கு அதிகமில்லை, குழந்தைபெறும் திட்டமும் இல்லை என்ற பட்சத்தில் அதற்குப் பெரிய சிகிச்சைகள் தேவைப்படாது.

அதுவே குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மாதாமாதம் பீரியட்ஸ் வரவில்லை என்றால் சிகிச்சை அவசியம். உங்கள் விஷயத்தில் மாதத்தில் இரண்டு முறை பீரியட்ஸ் வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

Napkins

பிசிஓடி பாதிப்பைப் பொருத்தவரை ஹார்மோன்களின் சமநிலையின்மைதான் பெரும்பிரச்னையே. அடிக்கடி மாதவிடாய் வரும்போது ப்ளீடிங் காரணமாக வேறு சில பிரச்னைகளும் வரக்கூடும். எனவே நீங்கள் மருத்துவரை அணுகி 3 முதல் 6 மாத காலத்துக்கு ஹார்மோன் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். வெள்ளைப்படுதலுக்கான காரணத்தையும் உங்கள் மருத்துவர் ஆராய்ந்து, தேவைப்பட்டால் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பரிந்துரைப்பார்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/s8ijV43

Post a Comment

0 Comments