விருதுநகர்: டூ-வீலர் பெட்டியிலிருந்து, ரூ.3 லட்சம் திருடிய இளைஞர் - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் ஊராட்சியில் தலையாரியாக பணியாற்றி வருபவர் மாரியப்பன். சேத்தூரை சேர்ந்த இவர் வெளிநபர்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.


இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி அதிகாரிகள், கடந்த 2 நாள்களுக்கு முன் மாலை சுமார் 5 மணி அளவில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் லோன் தந்தனர். பணத்தை வாங்கிக்கொண்ட மாரியப்பன், அதை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டிக்குள் வைத்துக்கொண்டு புறப்பட்டார். இந்நிலையில், வீட்டுத்தேவைக்கு விளக்கு வாங்குவதற்காக தென்காசி பிரதான சாலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, எதிரே இருந்த கடைக்குள் சென்றுள்ளார் மாரியப்பன்.

சி.சி.டி.வி.காட்சியில் உள்ள நபா்z

அப்போது அவரின் நடவடிக்கைகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர், மாரியப்பன் மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து 3 லட்ச ரூபாயை திருடி சென்றுள்ளார். கடையில் இருந்து திரும்பி வந்த மாரியப்பன் மோட்டார் சைக்கிளின் பெட்டி திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பெட்டிக்குள் இருந்த 3 லட்சத்து 50 ஆயிரத்தில் 3 லட்சம் திருடு போயிருந்ததும், ரூ.‌50 ஆயிரத்துக்கான 500 ரூபாய் கட்டு மட்டும் பெட்டிக்குள் கிடந்ததும் தெரியவந்தது.


இதனையடுத்து பணம் திருடு போனது குறித்து மாரியப்பன் ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜபாளையம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சபரிநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே வணிக நிறுவனங்களின் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு மேராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் ஜீன்ஸ் பேண்டு சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி மாரியப்பன்‌ மோட்டார் சைக்கிள் அருகே நின்றுக்கொண்டிருப்பதும், தொடர்ந்து தலையில் தொப்பியை மாட்டிக்கொண்டு மாரியப்பனின் டூ-வீலர் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக தப்பித்து ஓடியதும் பதிவாகியிருந்தது. இந்தக்காட்சிகளைக்கொண்டு பணத்தை திருடிய குற்றவாளியை பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



from Latest News https://ift.tt/RfZ3ygI

Post a Comment

0 Comments