Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா?

சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தேன் மற்றும் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா?

- ஜோதி (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாகத் தேன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. ஒரு டீஸ்பூன் தேனில் 4 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வது சரியானதல்ல.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். வெறும் நெல்லிக்காய் சாப்பிடலாமா என்று கேட்டால் நிச்சயம் சாப்பிடலாம். அதிலுள்ள வைட்டமின் சி சத்தும், நச்சுநீக்க தன்மையும் ஆரோக்கியத்துக்கு உதவும். தேனில் பொட்டாசியம் சத்து அதிகமில்லை. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள்.

அதே நேரம் பொட்டாசியம் சத்துள்ள காய்கறிகள் மற்றும் உணவுகளைச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்படும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பொட்டாசியம் சத்துள்ள சிரப் கொடுப்பதைக்கூட நீங்கள் பார்க்கலாம். அந்த வகையில் தேனில் பொட்டாசியம் இல்லாததால் அது எந்த வகையிலும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவப்போவதில்லை.

Honey

சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தேன் சேர்த்த நெல்லிக்காய் நல்லது என ஆயுர்வேதம்கூட சொல்கிறது. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் அது ஏற்றதல்ல."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/brylEp1

Post a Comment

0 Comments