நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதா. இவர், விசைத்தறி கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் கணவரும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, ராதா நேற்று (2 -ம் தேதி) ஈரோடு செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவர், தண்ணீரில் தத்தளித்ததை பார்த்து அதிர்ச்சியான அந்த வழியாக சென்றவர்கள், கூச்சல் போட்டுள்ளனர்.
அப்போது, ஆற்றின் நடுவே பரிசலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் அதை பார்த்து, உடனடியாக, தனது பரிசலில் வந்து காவிரி ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றார். ஆனால், ராதாவை காப்பாற்றினாலும், அவரால் அரைமயக்கத்தில் இருந்த ராதாவை தனியாளாக பரிசலில் ஏற்றமுடியவில்லை. செய்தவறியாது அவர் திகைத்து நிற்க, அதைப் பார்த்த பாலத்தின் மீது நின்றிருந்த இளைஞர் ஒருவர், தைரியமாக தண்ணீரில் குதித்தார்.
அதைத்தொடர்ந்து, அந்த இளைஞரும் பரிசலில் ஏறி, மீனவரோடு சேர்ந்து ராதாவை பரிசலில் ஏற்றி காப்பாற்றி, கரைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் காவல் நிலைய போலீஸார், ராதாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தற்கொலை சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்பிறகுதான், கடன் பிரச்னையால் மனஉளைச்சலில் இருந்த ராதா, காவிரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதற்கிடையில், ராதா காவிரில் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது, தண்ணீரில் தத்தளித்தது, அதைத்தொடர்ந்து இளைஞர் ஒருவரின் உதவியோடு மீனவர் ராதாவை காப்பாற்றியது என அனைத்தையும் பாலத்தின் மீது நின்றிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதை பார்க்கும் அனைவரையும் திக்திக் அதிர்ச்சியடைய வைக்கிறது. இதற்கிடையில் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ``பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர்கள் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், தற்கொலை முனையாக இந்தப் பகுதி காவிரி ஆறு மாறி வருவதை தடுக்க, காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு பேனர்கள் வைத்து காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/IaHKQPd
0 Comments