Doctor Vikatan: கர்ப்பகால நீரிழிவு; அடிக்கடி வரும் சிறுநீர்த் தொற்று; என்ன செய்வது?

எனக்கு 2-வது மகப்பேற்றின்போது நீரிழிவு வந்தது. அதன் பிறகு டாக்டர் பரிந்துரையின் பேரில் மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். ரத்தச் சர்க்கரை அளவு நார்மலாக இருந்தபோதிலும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?

- கீர்த்தனா (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் கார்த்திகா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.

``ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் அடிக்கடி சிறுநீர்த் தொற்று வருகிறது என்றால் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. அடிக்கடி வரும் சிறுநீர்த் தொற்றுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கப்பட வேண்டும். அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று பாதிப்பை Recurrent Urinary Tract Infection என்று சொல்வோம். அதாவது ஆறு மாதங்களில் இருமுறைக்கு மேல் அல்லது ஒரு வருடத்தில் மூன்று முறைக்கு மேல் சிறுநீர்த் தொற்று வருவதை 'ரெகரன்ட் யூரினரி ட்ராக்ட் இன்ஃபெக்ஷன்' என்று சொல்வோம். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு இப்படி அடிக்கடி சிறுநீர்த் தொற்று வரலாம்.

அதற்கு முன், சிறுநீர்த் தொற்று ஏற்படும்போது சிறுநீரை 'கல்ச்சர் சென்சிட்டிவிட்டி டெஸ்ட்' செய்து அதில் என்ன கிருமி வளர்கிறது, அது எந்தெந்த ஆன்டிபயாடிக்குகளுக்கு எதிர்வினையாற்றுகிறது என்று பார்க்க வேண்டியிருக்கும். அதைவைத்து முழுமையான ஆன்டிபயாடிக் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்.

ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் இந்தச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மாத்திரைகளை முடித்ததும் மீண்டும் ஒருமுறை சிறுநீர்ப் பரிசோதனை செய்து பார்த்து அந்தத் தொற்று முழுமையாக குணமாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். அதுவே தண்ணீர் குடிக்காததால் சிறுநீர் கழிக்கும்போது வலி, எரிச்சல் ஏற்படுவதை சிறுநீர்த் தொற்றாகக் கணக்கில் எடுக்க முடியாது.

கர்ப்பிணி (Representational Image)

இதையெல்லாம் மீறியும் அடிக்கடி தொற்று வருகிறது என்றால் சிறுநீர்ப் பையில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதை மருத்துவர் ஸ்கேன் செய்து உறுதிபடுத்துவார். ஆசனவாயிலிருந்து இ-கோலை (E. coli) கிருமிகள் சிறுநீர்ப்பாதையில் வந்து தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிக அதிகம். அதனால்தான் கழிவறை பயன்படுத்தியதும் எப்போதும் முன்னாலிருந்து பின்பக்கமாகக் கழுவச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். கழிவறை பயன்படுத்தியதும் அந்தரங்க உறுப்புகளை ஈரமின்றி வைத்திருக்க வேண்டும். கழிவறை சுத்தம் பராமரிக்கப்பட வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/nx3UBCu

Post a Comment

0 Comments