Doctor Vikatan: குழந்தைகளுக்கு எது பெஸ்ட்; மாத்திரைகளா, ஊசியா?

சிறு குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதும், காய்ச்சலின் போதும் மாத்திரைகளாகக் கொடுப்பது சிறந்ததா.... ஊசி போடுவது சிறந்ததா?

- சரஸ்வதி (விகடன் இணையத்திலிருந்து)

பொது மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்.

``எந்தப் பிரச்னைக்கும் ஊசி போடலாமா, கூடாதா என்பதை குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர பெற்றோரோ, மற்றவர்களோ முடிவு செய்யக்கூடாது. உதாரணத்துக்கு குழந்தைக்கு சளிப் பிடித்திருக்கும். அதற்காக மாத்திரைகளைப் பரிந்துரைப்பார் மருத்துவர். அதில் குணமாகாத நிலையில் அதை ஊசி போட்டு குணமாக்காமல், டெஸ்ட் செய்து கண்டுபிடித்து, அதன்பிறகு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. தேவைப்பட்டால் மருத்துவர், மாத்திரைக்கு பதில் ஊசியைப் பரிந்துரைப்பார்.

குழந்தைகளுக்கு 5 வயது வரையிலான தடுப்பூசிகளைப் போட்ட பிறகு, ஏழரை வயதில் போடக்கூடிய தடுப்பூசி இருக்கிறது. எனவே தடுப்பூசிகளை எல்லாம் நினைவில்வைத்திருந்து குழந்தைகளுக்குப் போட வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

தடுப்பூசிகளைத் தவிர கிருமிநாசினிகளுக்கான ஊசிகளை மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் பயன்படுத்துவது ரொம்பவே குறைவு. அது தேவை என மருத்துவர் பரிந்துரைக்கும்போது வாக்குவாதம் செய்யாமல் ஏற்றுக்கொள்வது நல்லது.

தீவிர வாந்தி பிரச்னையுடன் ஒரு குழந்தையைக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். உடனடியாக ஊசி போட்டால் அதை நிறுத்த முடியும், அதன் பிறகு அந்தக் குழந்தையால் மற்ற மருந்துகளையும் உணவுகளையும் சாப்பிட முடியும் என்ற நிலையில், ஊசி போட மாட்டேன் என சொல்வது சரியில்லை. அதையும் தாண்டி பிரச்னை தீவிரமான நிலையில் மருத்துவரிடம் அழைத்துவரும்போது மருத்துவமனையில் அட்மிட் செய்து, பரிசோதனைகளை எல்லாம் மேற்கொண்டு, தேவைப்பட்டால் குளுக்கோஸ் ஏற்றி, குணமான பிறகுதான் வெளியே அனுப்ப முடியும்.

Baby (Representational Image)

எனவே சில நோய்களுக்கு சில ஊசிகளைத் தவிர்க்க முடியாது. மருத்துவரின் மேல் நம்பிக்கை வையுங்கள். `தேவைன்னா போடுங்க டாக்டர்' என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். ஊசி தேவையில்லை என்று வாதம் செய்வது போலவே ஊசி போடச் சொல்லி மருத்துவரைக் கேட்பதும் தேவையற்றது."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/1eZLHhg

Post a Comment

0 Comments