கும்பகோணத்தில் தி.மு.க அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மாநில இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின்,உதயசூரியன் படத்துடன் தங்க முலாம் பூசப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து கட்டட பணியை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.கவினர் மற்றும் இளைஞரணியை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். `கும்பகோணத்தில் திராவிட திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா மற்றும் 320 பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க அலுவலக கட்டடம் கட்டுவதற்காக தங்க முலாம் பூசப்பட்ட செங்கல்லை வைத்து உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பூஜை செய்தனர். பூஜை செய்யப்பட்ட செங்கல்லை வைத்து கட்டட பணியை தொடங்கி வைத்த பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ``தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்துக்கு புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புதிய கட்டட திறப்பு விழா அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிச்சயம் நடைபெறும். அந்த விழாவில் அவசியம் நானும் கலந்து கொள்வேன்.
கட்டடம் கட்ட தங்கமுலாம் பூசப்பட்ட செங்கலை என்னிடத்தில் கொடுத்து அதற்கு உண்டான பூஜைகளை செய்தனர். மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. இதைப் பார்த்து நமது எதிரிகள் வயிறு எரிவார்கள். அதற்காகவே அமைதியாக பூஜைகளில் கலந்து கொண்டேன். எனக்கும் செங்கலுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. பிரசாரத்துக்கு வருகைதந்த பிரதமர் மோடி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை. திமுக-வின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். ஆனால் அதற்கு முன்பே மூத்த உறுப்பினர் களுக்கு ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி கூறிய ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் இதுவரை பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை” என்றார்.
பின்னர் தஞ்சாவூரில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு செந்தில்வேலன் என்பவர் வீரவாள் பரிசு கொடுத்து வரவேற்றார்.
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செயப்பட்டிருந்த விழுதுகளாக தாங்கி நிற்போரை தாங்கும் பொற்கிழி வழங்கல், திமுக மூத்த முன்னோடிகளின் உருவப் படம் திறப்பு, 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடியேற்று விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
மேயர் சண்.ராமநாதன் இளைஞர் அணியின் வளர்ச்சிக்காக ரூ.6 லட்சம் நிதியை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தார். ரூ.50,000 மதிப்பில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை கொண்டு தயார் செய்த பண மாலையை உதயநிதி ஸ்டாலினுக்கு அணிவித்தார். கட்சியினர் பலரும் மேடைக்கு முன்னதாக திரண்டு நின்றனர். அப்போது எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் எல்லாரையும் ஓரமாக இருக்க சொன்னார். யாரும் கேட்கவில்லை. இதனால் கோபமான சந்திரசேகரன், ``தலைவர் இந்த நிகழ்ச்சியை டி.வி லைவ்ல பார்த்து கொண்டிருக்கிறார். இப்படி இருந்த எங்கள திட்டுவார்” என கடிந்துக் கொண்டார்.
கட்சியின் முத்த முன்னோடிகள் 603 பேருக்கு தலா ரூ 5,000 பொற்கிழி, மெடல், ஷீல்டு உள்ளிட்டவற்றை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது, ``கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தஞ்சாவூரில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் தமிழகம் முழுவதும் கட்சியின் முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியாக வழங்க வேண்டும். தஞ்சாவூரில் இரண்டாவது தவணையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
கட்சிக்காக உழைத்தவர்களை கவுரவப்படுத்ததான் இந்த விழா நடத்தப்படுகிறது. இங்குள்ளவர்கள் பெரியார், அண்ணாவை பார்திருப்பீர்கள். நான் பார்த்ததில்லை. இங்குள்ளவர்களின் உருவத்தில் அவர்களது மறு உருவமாக பார்க்கிறேன். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றியை பெற உங்களது வழிகாட்டுதல்களும்,அன்பும் தேவை” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/H0pDsyQ
0 Comments