``எங்கள் அணி `சிவசேனா பாலாசாஹேப்’ என அழைக்கப்படும்” - ஏக்நாத் ஷிண்டே தரப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவில் ஏற்பட்டிருக்கும் கோஷ்டி மோதலால் எப்போது வேண்டுமானாலும் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழலாம் என்ற சூழ்நிலை இருந்துவருகிறது. அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாம் மாநிலத்தில், அந்த மாநில அரசின் பாதுகாப்பில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதால் சிவசேனாவை அடியோடி கைப்பற்ற ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டிருப்பதாகவும், கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்கவோ அல்லது தங்களது அணிக்குப் பெறவோ முயன்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அதிருப்தி கோஷ்டியில் இடம்பெற்றிருக்கும் தீபக் கேசர்கர் அளித்திருக்கும் பேட்டியில், ``எங்களது அணி `சிவசேனா பாலாசாஹேப்’ என்று அழைக்கப்படும். நாங்கள் எந்தக் கட்சியுடனும் சேர மாட்டோம்” என்று குறிப்பிட்டார். துணை சபாநாயகர் நர்ஹரிக்கு அதிருப்தி கோஷ்டி அனுப்பியிருக்கும் கடிதத்தில் தங்களது அணியின் சட்டமன்றத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதோடு துணை சபாநாயகருக்கு எதிராக ஷிண்டே ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்கின்றனர். அந்தத் தீர்மானம் துணை சபாநாயகருக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. மர்ம மெயிலில் வந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று துணை சபாநாயகர் நர்ஹரி தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் 33 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

உத்தவ் தாக்கரே

துணை நபாநாயகரிடம் அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த 16 சிவசேனா எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்யக் கோரி சிவசேனா கடிதம் கொடுத்திருக்கிறது. அந்தக் கடிதத்தை துணை சபாநாயகர் ஏற்றுக்கொண்டிருக்கிறாஅர். மேலும் அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொடுக்கப்பட்டுவந்த பாதுகாப்பை மாநில அரசு திரும்பப் பெற்றிருக்கிறது. இதற்கு ஏக்நாத் ஷிண்டே கடும் கண்டனம் தெரிவித்து உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சிவசேனா மறுத்திருக்கிறது. பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட நிலையில் புனேயில் அதிருப்தி எம்.எல்.ஏ தானாஜி சாவந்த் அலுவலம் அடித்து நொறுக்கப்பட்டது. மும்பையிலும் இது போன்ற சம்பவம் நடந்திருப்பதால் புனே, மும்பையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதற்கிடையே சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில், ``சிவசேனா பெரிய கட்சி. அதை யாரும் அபகரித்துவிட முடியாது. இது எங்களது ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. இதற்காகப் பலர் தங்களை தியாகம் செய்துள்ளனர். பண பலத்தால் அதை யாராலும் உடைக்க முடியாது” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.



from Latest News https://ift.tt/4bcTrQi

Post a Comment

0 Comments