நெல்லை: 6 மாதக் கைக்குழந்தை கடத்தல்; இரு பெண்கள் உட்பட செய்தியாளரும் கைது!

நெல்லை மாவட்டம், கீழப்பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மனைவி இசக்கியம்மாள். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் இவர்களுக்கு ஆறு மாத கைக்குழந்தை உள்ளது. கணவன் வேலைக்குச் சென்ற பின்னர் அருகில் இருக்கும் கடைக்குச் செல்வதாக இருந்தால் இசக்கியம்மாள் தன் குழந்தையைப் பக்கத்து வீடுகளில் விட்டுச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், 20-ம் தேதி இரவு இசக்கியம்மாள் தன் குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்துத் தூங்கியுள்ளார். ஆனால், அதிகாலை 5 மணிக்குக் கண்விழித்துப் பார்த்தபோது அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை. அதனால் பதறித் துடித்த கார்த்திகேயனும், இசக்கியம்மாளும் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களிடம் விசாரித்தும் குழந்தை கிடைக்கவில்லை.

மிகுந்த மனவேதனை அடைந்த பெற்றோர் பாப்பாக்குடி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். இது தொடர்பாக அம்பாசமுத்திரம் வட்ட காவல் ஆய்வாளர் சந்திரமோகன் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டார். அந்தப் பகுதிக்குச் செல்லும் வழிகளில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், இரு பெண்களும் ஒரு ஆணும் இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்த செல்போன் டவர் மூலம் நள்ளிரவு நேரத்துக்கு மேல் பேசியவர்களின் நம்பரை வைத்து விசாரித்ததில் இரு பெண்களும் ஆணும் யார் என்பது தெரியவந்தது. அதனால் அவர்களை போலீஸார் கைதுசெய்து குழந்தை காணாமல் போன 36 மணி நேரத்திலேயே மீட்டனர்.

இது குறித்து அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி-யான பிரான்சிஸ் கூறுகையில், ``குழந்தை காணவில்லை என்று இசக்கியம்மாள் புகார் அளித்ததும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் டவர் உதவியுடன் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

குற்றவாளிகளைப் பிடித்த போலீஸார்

புகார் கிடைத்த 36 மணி நேரத்துக்குள்ளாக கீழப்பாப்பாக்குடி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கனியம்மாள், ஜெகன் என்பவரின் மனைவி முத்து செல்வி, ஆலங்குளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கார்த்திகேயன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள்” என்றார்.

வறுமையில் இருப்பவரின் குழந்தையைக் கடத்தி வசதியானவர்களிடம் விற்பனை செய்தால் நல்ல பணம் கிடைக்கும். அதோடு, குழந்தையைப் பறிகொடுத்தவர்களும் புகார் கொடுக்காமல் விட்டுவிடுவார்கள் என மூவரும் திட்டமிட்டிருக்கிறார்கள். குழந்தையை ஆலங்குளம் பகுதியில் யாருக்காவது விற்பனை செய்யத் திட்டமிட்டு சிலரிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.

கைக்குழந்தையை மீட்ட போலீஸாருக்கு பாராட்டு

தங்களை போலீஸார் பிடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், மூவரின் நடமாட்டத்தை சிசிடிவி காட்டிக் கொடுத்ததால் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்து குழந்தையை மீட போலீஸாரை மாவட்ட எஸ்.பி-யான சரவணன் பாராட்டி பரிசு வழங்கினார்.

கைக்குழந்தை கடத்தலில் செய்தியாளர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/azWckX2

Post a Comment

0 Comments