புதுச்சேரி: `ரத்தம் கக்கி சாவார்கள்' - பணம், நகைகளை கொள்ளையடித்த பெண் போலி சாமியார் கைது

புதுச்சேரி கோரிமேடு இந்திராநகரை சேர்ந்த முருகன் என்பவர் எலக்ட்ரீஷியனாக இருக்கிறார். அவரின் மனைவி லட்சுமி வீட்டிலேயே தையல் இயந்திரம் வைத்து பெண்களுக்கான உடைகளை தைத்துக் கொடுத்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுடன் வீட்டில் முருகனின் அப்பா துரைராஜனும், தாய் உதயகுமாரியும் வசித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்தியவதி என்ற இளம்பெண் லட்சுமி வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு கேட்டு சென்றார். அப்போது தான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும், தனது கணவர் திண்டிவனம் மார்க்கெட்டில் பணியாற்றி வருவதாகவும் லட்சுமியிடம் கூறியிருக்கிறார் சத்தியவதி. அவரின் பேச்சு மற்றும் தோற்றத்தைப் பார்த்து வீட்டை வாடகைக்கு கொடுத்த லட்சுமி, அவரிடம் நட்பாக பழகி வந்தார்.

போலி சாமியார்

அப்போது தனது கணவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படுவதாக சத்தியவதியிடம் கூறி ஆறுதல் தேடியிருக்கிறார் லட்சுமி. அப்போது தான் ஒரு மந்திரவாதி என்று கூறிய சத்தியவதி, முருகனின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த 16 வயதில் இறந்து போன அவரின் அக்கா போட்டோவை காட்டி ”உங்கள் வீட்டில் தோஷம் இருக்கிறது. அந்த தோஷத்தை நீக்கிவிட்டால் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும். உன் கணவருக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்று வலியையும் பரிகாரம் மூலம் உடனே சரி செய்துவிடலாம்” என்று கூறியிருக்கிறார் சத்தியவதி.

மேலும் பெண்கள் மட்டும்தான் இந்த தோஷத்தை நீக்க வேண்டும் என்றும் ஆண்களுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்றும் லட்சுமியிடமும், அவரின் மாமியார் உதயகுமாரியிடமும் கூறியிருக்கிறார் சத்தியவதி. லட்சுமி அதனை அப்படியே நம்பிவிட்ட நிலையில், அவர்களை காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று பூஜை செய்திருக்கிறார் சத்தியவதி.

அதையடுத்து, ``இனி காஞ்சிபுரத்திற்கு போகவேண்டாம் நம் வீட்டிலேயே பரிகார பூஜையை செய்துகொள்ளலாம். ஆனால் ஆண்களுக்கு தெரியக் கூடாது” என்று சத்தியவதி கூற, தனது கணவருக்கு தெரியாமல் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார் லட்சுமி. அதையடுத்து நினைக்கும்போதெல்லாம் பூஜைகளை செய்திருக்கிறார் சத்தியவதி. ஓவ்வொரு முறை பூஜையின்போதும் லட்சுமியிடம் பணம், நகைகளை கேட்டு வாங்கியிருக்கிறார் சத்தியவதி. அதன்படி கடந்த ஒரு வருடத்தில் ரூ.15,00,000 பணத்தையும், 37 சவரன் நகைகளையும் படிப்படியாக கொடுத்திருக்கிறார் லட்சுமி. பலநாட்கள் பூஜை செய்தும் முருகனின் வயிற்று வலி சரியாகாததால் சத்தியவதியிடம் அதுகுறித்து கேட்டிருக்கிறார் லட்சுமி. அப்போது நிரந்தரமாக குணமடைய வேண்டுமென்றால் சிறிது நேரம் பிடிக்கும்தான் என்று கூறியிருக்கிறார் சத்தியவதி. இதற்கிடையில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட முருகன், அதற்காக சிகிச்சையை எடுத்திருக்கிறார்.

போலி சாமியார் சத்தியவதி

அந்த சிகிச்சையில் முருகனுக்கு இருந்த வயிற்றுவலியும் குணமாகியிருக்கிறது. அதனை தெரிந்துகொண்ட சத்தியவதி, தான் செய்த பரிகார பூஜைகளால்தான் உன் கணவருக்கு வயிற்றுவலி சரியானது என்று கூறியிருக்கிறார். லட்சுமியும் அதை நம்பிவிட்டதால் சந்தோஷமான சத்தியவதி, ”இந்த பரிகார பூஜை குறித்து வெளியில் சொன்னால் குழந்தைகள் உட்பட குடும்பத்திலுள்ள அனைவரும் ரத்தம் கக்கி சாவார்கள்” என்று லட்சுமியிடம் கூறியிருக்கிறார். அதில் பயந்துபோன லட்சுமி அதுகுறித்து யாரிடமும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில்தான் லட்சுமியின் மாமனார் துரைராஜுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. அதனால் அவர் குணமடைவதற்காக பரிகார பூஜை செய்யுமாறு சத்தியவதியிடம் கேட்டிருக்கிறார்கள் லட்சுமியும், அவரது மாமியார் உதயகுமாரியும்.

அப்போது, ”உன் மாமனார் இன்னும் 50 வருஷத்துக்கு நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமா இருப்பாரு” என்று கூறி பரிகார பூஜையை செய்திருக்கிறார் போலி மந்திரவாதியான சத்தியவதி. இந்நிலையில்தான் கடந்த மாதம் உயிரிழந்தார் துரைராஜ். அவரின் கருமாதிக்கு வந்த பணத்தை வீட்டிற்கு செலவு செய்தால் தோஷமாகிவிடும் என்று கூறி அதையும் லட்சுமியிடம் கறந்திருக்கிறார் சத்தியவதி. இதற்கிடையில் ஏழாம் வகுப்பு படிக்கும் லட்சுமியின் மகளை சிறுமி என்றுகூட பாராமல் தனது வீட்டு வேலைகளை செய்ய வைத்தும், அதை செய்யாத நேரத்தில் அந்த சிறுமியை அடித்தும் சூடு வைத்தும் சித்ரவதை செய்திருக்கிரார் சத்தியவதி. இது அனைத்தும் தனது கண் முன்னே நடந்தும் மந்திரவாதி சத்தியவதியால் குடும்பத்திற்கு நல்லது நடக்கும் என்று நினைத்து அமைதியாக இருந்திருக்கிறார் லட்சுமி. ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதைப் போல உணர்ந்தாலும், பரிகார பூஜை பற்றி வெளியில் சொன்னால் குடும்பத்தினர் ரத்தம் கக்கி இறந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அமைதியாக இருந்திருக்கிறார் லட்சுமி.

கருமாதி நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் லட்சுமி தங்களிடம் கடன் வாங்கிய விபரத்தை முருகனிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து நடந்த அனைத்தையும் லட்சுமி கூற அதிர்ச்சியான முருகன், கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனப்படையில் வழக்கு பதிவு செய்த கோரிமேடு போலீஸார், சத்தியவதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ”எளிய மக்களுக்கு கடவுள் மீதிருக்கும் நம்பிக்கையைத்தான் இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். திருஷ்டி கழிக்கிறோம், பாவத்தைப் போக்குகிறோம் என்று கூறி ஏமாற்றுகிறார்கள். அதனால் இப்படியான போலி சாமியார்களிடமும், போலி மந்திரவாதிகளிடமும் பொதுமக்கள் உஷாராக நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார் கோரிமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/gjKL63r

Post a Comment

0 Comments