தூத்துக்குடி மாணவிக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரேஸ் சைக்கிள் பரிசளித்த கனிமொழி - காரணம் இதுதான்!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர், புதியம்புத்தூரில் உள்ள ஜான் தி பேப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஸ்ரீமதி தனது 13வது வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். தன்னிடம் சொந்தமாக சைக்கிள் இல்லாததால், பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் கலந்துகொள்வதற்காக தன் உறவினர்களிடம் சைக்கிளை இரவல் வாங்கி சைக்கிள் ஓட்டிப் பயிற்சி எடுத்துள்ளார். அந்த ஊரில் நடந்த கோயில் திருவிழாவிலும் இரவல் சைக்கிள் வாங்கிப் பெண்கள் பிரிவில் கலந்துகொண்டார்.

ரேஸ் சைக்கிளில் மாணவி ஸ்ரீமதி

அந்த முதல் போட்டியிலேயே முதல் பரிசை வென்றார். தொடர்ந்து மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு சைக்கிள் போட்டிகளிலும் பங்கேற்றுக் கோப்பைகளையும் பதக்கங்களையும் வென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், போட்டியில் கலந்துகொள்ளத் தேவையான பிரத்யேக ’ரேஸ் சைக்கிள்’ வாங்க அவரது குடும்பத்தினரிடம் பணம் இல்லை. அதனால், அந்தப் போட்டியில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.

சைக்கிள் போட்டிக்கு ஏற்ற ரேஸ் சைக்கிள் வாங்குவதற்காகப் பலரிடம் உதவிகள் கேட்டும், அவருக்கு ஏமாற்றமும் நிராகரிப்பும் மட்டுமே மிஞ்சியது. இந்நிலையில், கீழமுடிமண் கிராமத்திற்கு கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் தனக்கு சைக்கிள் வாங்கித் தந்து உதவிட குடும்பத்தினருடன் மனு அளித்தார். அவர் மனு அளித்த ஒரு வாரத்திலேயே ரூ.5 லட்சம் மதிப்புடைய புதிய ரேஸ் சைக்கிளை வழங்கினார்.

சைக்கிள் போட்டியில் ஸ்ரீமதி

அந்த சைக்கிள் மூலமாக ராஜஸ்தானில் தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழுப் போட்டியில் தங்கப்பதக்கமும், தனிப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த டிராக் சைக்கிளிங் குழுப் போட்டியிலும் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலில் நடைபெறவுள்ள உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.

அப்போட்டியில் கலந்துகொள்ளப் பயிற்சி பெறுவதற்காக தனக்கு பிரத்யேக சைக்கிளை வழங்கிட ஸ்ரீமதி, கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார். இதன் அடிப்படையில், மாணவி ஸ்ரீமதிக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான ரேஸ் சைக்கிளைத் தூத்துக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து வழங்கி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார் கனிமொழி. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அமைச்சர் கீதாஜீவனும் வாழ்த்தினார்.

பயிற்சியாளர், சக தோழிகளுடன் ஸ்ரீமதி

மாணவி ஸ்ரீமதியிடம் பேசினோம், "எங்கப்பா ஜேசுதார், புதியம்புத்தூர்ல உள்ள ஒரு தையல்கடையில டெய்லரா வேலை பார்த்தாங்க. கொரோனாத் தாக்கத்துக்குப் பிறகு தையல் வேலை பெருச்சா இல்லேங்கிறதனால டிராக்டர் ஓட்டுறது, விவசாய வேலை பார்க்குறதுன்னு கிடைச்ச வேலையைப் பார்த்துட்டிருக்காங்க. அம்மா தாயம்மாள், வீட்லதான் இருக்காங்க. என் தங்கச்சி நிறைமதி, நான் படிக்கிற ஸ்கூல்ல 9-ம் வகுப்பு படிக்கிறா. எனக்கு சின்ன வயசுல இருந்தே சைக்கிள் ஓட்டுறதுனா ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க வீட்ல சைக்கிள் கிடையாது. எங்க சொந்தக்காரங்க வீடுகளில் இருக்குற சைக்கிளை வாங்கி ஓட்டித்தான் கத்துக்கிட்டேன்.

எங்க ஊர்ல உள்ள என் வயசுப் பொம்பளைப்பிள்ளைகள் அஞ்சாறு பேரைச் சேர்த்துக்கிட்டு ஊரணி கரையில இருந்து பக்கத்தூருக்கு முன்னால இருக்குற பெரிய புளியமரத்துகிட்ட யாரு முதல்ல போறாங்கன்னு பார்ப்போமான்னு பந்தயம் வச்சு ஓட்டினோம். அதுவே எனக்கான முக்கியப் பந்தயப் பயிற்சியா மாறிடுச்சு. சைக்கிள் போட்டியில கலந்துக்கிடுற எல்லாத்துகிட்டயும் சைக்கிள் இருக்கும். ஆனா, எங்கிட்ட இருக்காது. அடிக்கடி சைக்கிள் கேட்கிறேன்னு சைக்கிள் தர்றதை நிப்பாட்டிட்டாங்க. சைக்கிள்ள காத்து இல்லம்மா, செயின் லூசாக் கிடக்கு, வீல்ல கோட்டம் கிடக்குன்னு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லுவாங்க. பக்கத்து ஊருக்கு நடந்தே போயி, வாடகை சைக்கிள் கடையில சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பழகினேன்.

கனிமொழி உடன் மாணவி ஸ்ரீமதி

ஸ்கூல்ல நடந்த சைக்கிள் போட்டியில கலந்துகிட்டு முதல் பரிசு வாங்கினேன். அப்படி ஒவ்வொரு போட்டியிலும் சீரியஸா கலந்துகிட்டேன். 2020-ம் வருஷம் எங்க கிராமத்துல உள்ள சமுதாய நலக்கூடத்துல தி.மு.கவோட கிராமசபைக் கூட்டம் நடந்துச்சு. அந்தக் கூட்டத்துல கனிமொழி மேடம் கலந்துகிட்டுப் பேசினாங்க. ஊர் மக்கள் சொன்ன குறைகளைக் கேட்டு குறிப்பெடுத்தாங்க.

நானும் ஒரு வெள்ளைப் பேப்பர்ல சைக்கிள் கேட்டு மனு கொடுத்தேன். ஒரு வாரத்துலயே 5 லட்ச ரூபாய் மதிப்புடைய ரேஸ் சைக்கிளை வாங்கிக் கொடுத்தாங்க. அந்த சைக்கிள்ல டிரெய்னிங் எடுத்துதான் ராஜஸ்தான்ல நடந்த நேஷனல் லெவல் போட்டியில கலந்துகிட்டு கோல்டு, சில்வர் மெடல் வாங்கினேன். ஒவ்வொரு முறை போட்டிகள்ல கலந்துக்கும் போதும் கனிமொழி மேடத்தை சந்திச்சு சொல்லிட்டுதான் போவேன். சர்வதேச லெவல் போட்டிகள்ல கலந்துக்கணும்னா மைதானத்துல ஓட்டக்கூடிய ரேஸ் சைக்கிள்தான் அனுமதிக்கப்படும். அந்த சைக்கிளை வாங்கித்தர கனிமொழி மேடத்திடம் கேட்டேன். சரின்னு சொன்னாங்க.

பயிற்சியில் ஸ்ரீமதி

இப்போ 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த சைக்கிளை வாங்கிக் கொடுத்திருக்காங்க. இது முழுக்கவே கார்பனால் ஆனது. வழக்கமான ரேஸ் சைக்கிள்ல 20 முதல் 21 செகண்டுல 250 மீட்டர் தூரத்தைக் கடக்க முடியும்னா, இந்த ரேஸ் சைக்கிள்ல 17 முதல் 19 செகண்டுல கடந்திடலாம். தொடர்ந்து பயிற்சி எடுத்தா இன்னும் செகண்டுகளோட எண்ணிக்கை குறையும். இஸ்ரேலில் நடக்கவுள்ள உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் சைக்கிள் போட்டியில நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்றார் உறுதியுடன்.

வாழ்த்துகள் ஸ்ரீமதி!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/r5A4seL

Post a Comment

0 Comments