தமிழ்நாட்டில் 2,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - முதல்வர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

கொரோனா பேரிடர் மூன்றாம் அலைக்குப் பிறகு தமிழ்நாடு மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்நிலையில், மூன்றாம் அலையில் அதிகமாகப் பரவிய ஒமைக்ரான் கொரோனா வைரஸின் திரிப்பான பி.ஏ-4, பி.ஏ-5 வகை கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. ஜூன் மாத தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனா

30.06.2022 நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. 1,008 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 11,094 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கிறன. இந்த பாதிப்பு எண்ணிக்கை இனிவரும் நாள்களில் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மருத்துவத்துறை அமைச்சர், செயலாளர் முதல் அரசின் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்தும், தடுப்பூசியை அதிகப்படுத்துவது தொடர்ப்பாகவும் பேசப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைத் தீவிரப்படுத்தவும், கண்காணிப்புகளை அதிகரிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில். ``உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2,000-ஐ கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

தொற்றுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக தடுப்பூசி உள்ளது. முதல் தவணை 95 சதவீதத்தினருக்கும், 2-ம் தவணை 85 சதவீதத்தினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கடந்த மாதத்துக்கு முன்பு வரை 88 சதவீதமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதுதான். தடுப்பூசி செலுத்தி ஓராண்டை கடந்தவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி படிப்படியாகக் குறைகிறது. அதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்



from Latest News https://ift.tt/Xygar1D

Post a Comment

0 Comments