விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்டத்தின் கீழ் அடிப்படை கல்விச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி பணிமனை தொடக்கவிழா ஆமத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 22 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், "தமிழ்நாட்டில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டத்தினை தமிழக அரசு 100% பங்களிப்பின்கீழ் ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கல்வியும், சுகாதாரமும் இரு கண்களாக எண்ணிப் பணியாற்றி வருகிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக ரூ.36,895 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். 1901ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 100 பேருக்கு 5 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர்.
ஆனால் கடந்த 2011ல் நடந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். தமிழகத்தில் 80.33 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 15 வயதிற்கு மேல் பள்ளி செல்ல முடியாத நபர்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3.19 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 4.80 லட்சம் நபர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.9.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
from Latest News https://ift.tt/uthXeny
0 Comments