கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சபீக்(37) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த டீக்கடையை நடத்தி வந்தார். இரவு முழுவதும் செயல்படும் இந்த டீக்கடையில் நேற்று அதிகாலையில் கடையில் டீ வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, கடையிலுள்ள சமையல் காஸ் சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் சுதாரித்துக் கொண்ட டீ மாஸ்டர் உட்பட கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியுள்ளர்.
ஆனால் திடீரென பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. அங்கு டீ குடிக்கச் சென்றிருந்த 2 பெண்கள், உட்பட 7 பேருக்கும், சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்கச் சென்ற ஒருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கும், நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் டீக்கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
தீக்காயம் அடைந்த 8 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் 20 நிமிடங்களுக்கு மேலாக சிலிண்டரில் தீ பற்றி எரிந்துள்ளதாகவும். தீயை அணைக்காமல் டீக்கடை இயங்கி வந்துள்ளதாகவும், அதிக வெப்பம் காரணமாக சிலண்டர் வெடித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வடசேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிலிண்டர் வெடி விபத்தில் காயம் அடைந்த தேநீர் கடையில் வேலை பார்த்து வந்த மூசா (48), பிரவீன் (25), சேகர் (52), டீ குடிக்கச் சென்ற சுப்பையன் (66), சுதா(43), சந்திரன் (62), சுசீலா உட்பட எட்டு பேருக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி முதல்வர் அறிவித்த உதவி தொகைக்கான காசோலை வழங்கினர்.
from Latest News https://ift.tt/T6almIQ
0 Comments