``பாகிஸ்தான், சீனா வாலை சுருட்டிவிட்டனர்.. அடுத்து அமெரிக்கா தான்" - திருப்பூரில் அண்ணாமலை

மத்திய அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கம் தொடர்பாக, தமிழ்நாடு பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்காக, கடந்த சில வாரங்களாகவே திருப்பூர் பாஜக-வினர் அண்ணாமலையை பள்ளி, கல்லூரிகளில் புரோமோட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

நேற்று பிரமாண்டமான மேடை அமைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களை கூட்டியிருந்தனர். நடிகர் விஜயின், ‘தலைவா.. தலைவா..’ பாடல் ஒலிக்க அண்ணாமலை என்ட்ரி கொடுத்தார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ``ஒருகட்சி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது. அப்படி இருந்தும் பாஜகவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது என்றால், அரசியல் மாற்றம் வேண்டும் என்பதுதான் காரணம். பாரதப் பிரதமர் மோடியின் 8 ஆண்டு ஆட்சியை ஏற்றுக் கொண்டு, மீண்டும் நல்லாட்சி தொடர வேண்டும் என நினைக்கின்றனர்.

அண்ணாமலை

கொரோனா தடுப்பூசியில் 200 கோடி டோஸ் என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியுள்ளது. இதன் காரணமாக தான் இன்று 50,000 பேர் வரை இங்கு கூடியிருக்கிறோம். டிஜிட்டல் இந்தியா என்ற போது எதிர்க்கட்சிகள், அது சாத்தியமில்லை என்று கூறினார்கள். கடந்த மாதம் மட்டும்10 லட்சம் கோடி ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்று சொல்பவர்கள் 70 ஆண்டுகளாக குடிசை வீடுகளாகத்தான் வைத்திருந்தனர். மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 14 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர். நாடு சுதந்திரமடைந்த 67 ஆண்டுகளில், 2014 வரை மொத்தமாக கட்டப்பட்ட கழிப்பறைகள் 5.50 கோடிதான்.

பாஜக மாநாடு

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் மத்திய பாஜக அரசு 11.50 கோடி கழிப்பறைகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். திமுக தலைவர்கள் தனித்தமிழ்நாடு வேண்டும் என முதல்வரை வைத்துக் கொண்டு பேசுகின்றனர். மோடி எங்கே போனாலும், அவரது தாய் மொழியான குஜராத்தில் பேச மாட்டார்.

யாரைப் பார்த்தாலும், ‘நல்லா இருக்கீங்களா?’ என்றுதான் நலம் விசாரிப்பார். ஐ.நா சபைக்கு சென்றால் கூட, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று தான் சொல்வார். எந்த நேரத்திலும் தமிழ்நாட்டை வளர்த்திக் கொண்டிருக்கிறார். திருப்பூரில் இருக்கும் மேயர் உண்மையில் மேயராக இல்லை. இங்கிருக்கும் திமுக எம்.எல்.ஏ நான் தான் மேயர் என்பது போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை

இங்கிருக்கும் அமைச்சர் என் பேச்சைத்தான் கேட்க வேண்டும் நான் தான் மேயர் என்பது போல செயல்படுகின்றார். இவர்கள் மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மக்களை அடிப்பதை திமுக அமைச்சர்கள் பொழுதுபோக்காகவே வைத்துள்ளனர். மக்களுக்கு எங்கும் மரியாதை இல்லை. சாதாரண மக்களை அடிப்பதுதான் திராவிட மாடல். சில இடங்களில் பெருச்சாளி இங்கேயும், அங்கேயும் ஓடும். அப்படி ஒருவர்தான் தர்மபுரி எம்.பி. 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பூமி தாய்க்கு பூஜை போடுவது வழக்கம். அவர் யார் என்றே பலருக்கு தெரியவில்லை. திராவிட ஆட்சியில் பூஜை போடுவதா என்று பூஜாரி அரசு அதிகாரிகளை கொச்சைப்படுத்தியுள்ளார்.

தர்மபுரி எம்.பி

இதை நாம் கண்டிக்க வேண்டும். இப்படியே விட்டால் கோயிலுக்கு போகக் கூடாது. பொட்டு வைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், இதுபோன்ற மதத்தை அவமானப்படுத்துபவர்களின் சீட்டை கிழித்து அனுப்ப வேண்டும்.

சமீபத்தில் அமைச்சர் மூர்த்தி, 'அண்ணன் உதயநிதி நீங்க நடிச்ச படம் கெத்து. நீங்கதான் தமிழ்நாட்டின் சொத்து.' என்று பேசுகிறார். வட இந்தியாவில் இருந்து எந்த நிறுவனத்தையும் உள்ளே விட மாட்டோம் என்று மூர்த்தி சொல்கிறார். லூலூ மால் என்ன வடுகபட்டியில் இருந்து வந்ததா. சிறு குறு தொழிலை அழிப்பதால் நாங்கள் லூலூமால் வேண்டாம் என்கிறோம்.

உதயநிதி

'இளங்கோவடிகள் எழுதியது சிலப்பதிகாரம். அண்ணன் உதயநிதி எழுதியது செங்கலதிகாரம்.' என அமைச்சர் நாசர் சொல்கிறார். உதயநிதி பிறப்பதற்கு முன்பே எம்.எல்.ஏ ஆக இருந்த அமைச்சர் ஒருவர், 'ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் துணை நின்றது போல தளபதிக்கு உதய் துணை நிற்பார்.' என்கிறார்.

எதற்கு இந்த பொழப்பு. உதயநிதிக்கு என்ன பட்டம் கொடுப்பது என்பதில் தான் இவர்கள் போட்டி போடுகின்றனர். தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கின்றன. கள்ளக்குறிச்சி பிரச்னையை தடுத்திருக்க வேண்டிய டி.ஜி.பி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தின் கோரிக்கைக்கும்,

கள்ளக்குறிச்சி

போராட்டத்துக்கும் பதில் சொல்ல முடியாமல் முதல்வர் செஸ் போட்டிக்கான படப்பிடிப்பில் இருக்கிறார். ஊழலற்ற ஆட்சியை கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். இன்று 15 மாதங்களில் மின்சாரத்தில் தொடங்கி ஸ்வீட்ஸ் பாக்ஸ் வரை ஏராளமான ஊழல் நடந்திருக்கின்றன.

நகரத்தில் யாருடைய நிலத்தை பார்க்காமல் விட்டால் ஜி ஸ்கொயர் நிறுவனம் பட்டா போட்டுவிடும். பாஜக அதைப்பற்றி பேசிய பிறகு அந்த நிறுவனம் குறித்து எந்த விளம்பரமும் வருவதில்லை. ஜி ஸ்கொயர் என்ற பெயரை மாற்றியுள்ளனர். இதுகுறித்து வருகின்ற நாள்களில் பேசுவோம்.

அண்ணாமலை

போலி பாஸ்போர்ட்களை சமூக விரோதிகளுக்கு கொடுத்து ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி வீரவசனம் பேசும், அறநிலையத்துறை அமைச்சரை கடந்த 15 நாள்களாக எங்கும் காணவில்லை. போகும் இடத்தில் எல்லாம் மக்கள் அவரிடம் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்.பிகளுடன் நாம் வெற்றி பெற்று மோடிஜி அமர வேண்டும். மெஜாரிட்டிக்கு 273 எம்.பி போதுமே என கேட்கலாம். இந்த அமெரிக்கா காரனை எல்லாம் மிரட்ட வேண்டும். இதே பாதையில் இந்தியா 10 ஆண்டுகள் பயணம் செய்தால், உலகத்தின் வல்லரசாக மாறிவிடும். இதனால் இந்தியாவின் வளர்ச்சியை சில உலக நாடுகள் குறி வைக்கிறார்கள். 303 எம்.பி கொடுத்ததற்கே பாகிஸ்தான், சீனாக்காரன் வாலை சுருட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பாஜக மாநாடு

8 ஆண்டுகளாக எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை. வெடித்தால் அந்த நாடே இருக்காது. மோடி என்ற புதிய மந்திர சொல்தான் அந்த தைரியத்தை கொடுத்திருக்கிறது. 70 ஆண்டுகாலமாக இருக்கும் திமுக, சாலையில் பாஜக கட்டும் கொடிகளை எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் கண்களில் தோல்வி பயம் தெரிகிறது. தமிழக மக்களுக்கு பிரச்னை என்றால் முதலில் பாஜக குரல்தான் ஒலிக்கும்." என்றார்



from மாவட்ட செய்திகள் https://ift.tt/phdKVNQ

Post a Comment

0 Comments