திருச்சி: கத்தை கத்தையாக லஞ்சப் பணம்... ரெய்டில் சிக்கிய நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்!

திருச்சி நீதிமன்றம் அருகே பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு அணைகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், கதவணைகள், கலிங்குகள் மற்றும் நீர் கட்டுப்பாட்டு கட்டுமானங்கள் போன்றவற்றை அமைப்பது மற்றும் பராமரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், கான்ட்ராக்டர்களிடம் வசூலில் இறங்கியடித்து கல்லா கட்டுவதாக, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று அதிரடி ரெய்டில் இறங்கினர்.

ரெய்டு

இந்த ரெய்டின் போது பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் கந்தசாமி மற்றும் உதவி பொறியாளர் மணிமோகன் ஆகியோரின் அலுவலக அறையில் கணக்கில் வராத 31 லட்ச ரூபாய் பணம் சிக்கியிருக்கிறது. எந்தவித ஆவணங்களும் இல்லாத அந்தப் பணம் குறித்து விசாரித்தபோது, இருவரும் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்துள்ளனர். வாய்க்கால் தூர்வாரும் பணிகளில் கான்ட்ராக்டர்களிடம் லஞ்சம் பெற்ற தகவல் குறித்து விசாரிக்க இருவருக்கும் வேர்த்துக் கொட்டியிருக்கிறது.

பின்னர் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் கந்தசாமி வீட்டிலும், கலெக்டர் அலுவலக சாலை ராஜா காலனி பகுதியில் உள்ள உதவி பொறியாளர் மணிமோகன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை இறங்கினர். இதில் மணிமோகன் வீட்டில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்

இதுகுறித்து விஷயமறிந்த அதிகாரிகளிடம் பேசினோம். “சமீபத்தில் திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்ட பகுதிகளில் வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரும் பணிகளும், வாய்க்கால்களின் பக்கவாட்டு சுவர் கட்டுமானப் பணிகள் நடந்தன. இதில் கட்டளை மேட்டு வாய்க்கால் பணிகளில் ஏகப்பட்ட முறைகேடு நடந்திருக்கிறது. திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் பெருமளவு, அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுசம்பந்தமான தகவல் எங்களுக்குக் கிடைக்கவே ரெய்டி நடத்தியிருக்கிறோம். ரெய்டில் சிக்கிய பணம் மற்றும் ஆவணங்களை வைத்து மேலும் விசாரணை நடத்தப்படும்” என்றனர்.



from Latest News https://ift.tt/UblehH1

Post a Comment

0 Comments