தூத்துக்குடி, கே.வி.கே.நகரைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவர், தனியார் கம்பெனியில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி பாலா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இசக்கியப்பனின் வீட்டின் அருகில் உயரமான பனைமரம் ஒன்று உள்ளது. நேற்று இரவில் வீசிய சூறைக்காற்றால் வேகமாக அசைந்தாடிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் காற்றின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியில் முறிந்து வீட்டிற்குள் விழுந்தது.
இதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. அந்த நேரத்தில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவதற்காக வெளியே வந்த குழந்தையின் அத்தை ராஜேஸ்வரியின் வலது கையில் மரம் விழுந்ததால் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எலும்பு நொறுங்கியதாலும், தசைச்சிதைவு ஏற்பட்டதாலும் அவரின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
”எங்களுக்கு கல்யாணமாகி 5 வருஷம் கழிச்சுத்தான் என் மகள் பொறந்தா. ஒன்றரை வயசுப் பிள்ளைன்னாலும் நல்ல சுறுசுறுப்பானவள். எப்போதும் வீட்டு முற்றத்துலதான் விளையாண்டுக்கிட்டிருப்பா. திடீர்னு வீசுன சூறைக்காற்றுல பனைமரம் முறிஞ்சு எம்புள்ள இறந்து போச்சு. வீட்டுக்கு முன்னால நின்ன ஒத்தப் பனைமரமே என் புள்ள உயிரைக் காவு வாங்கிடுச்சு. எம்புள்ளைக்கு வந்த நிலைமை எந்தப் புள்ளைக்கும் வரக்கூடாது” என விம்மி அழுதார் குழந்தையின் அப்பா இசக்கியப்பன்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் உயிரிழந்த குழந்தையின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், காயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. சூறைக்காற்றில் பனைமரம் முறிந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/lME0TvP
0 Comments