மயிலாடுதுறை அருகே குளத்தை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மங்கைநல்லூர் நத்தம் ஜெயராஜ் நகரில் அய்யனார்கோயில் குளம் உள்ளது. இந்தக் குளத்தின் அருகே ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுக்காலமாக இந்தக் குளத்தைப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர்வரும் வாய்க்கால், வடிகால் வாய்க்கால் என அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துபோய்விட்டன. மழைக்காலங்களில் மழைநீரால் குளம் நிரம்பி வழியும். இந்த நீர் வடிவதற்குகூட வழியின்றி இருந்து வருகிறது. மேலும் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் மாசுப்பட்டு துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர்.
இந்தச் சூழலில் திடீரென மேலமங்கைநல்லூரைச் சேர்ந்த சில மிராசுதார்கள் குளம் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், இதில் ஆதிதிராவிட மக்களுக்கு உரிமையில்லை என்றும் கூறி ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர்மீது பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இப்பிரச்னை தொடர்பாக குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வரும் அய்யனார்கோயில் குளத்தை அந்தப் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பராமரித்து பயன்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டுமெனக்கூறி அக்கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர். குளத்திற்காக கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள், ``பல்லாண்டு காலமாக அவ்வூர் மக்கள் பயன்படுத்தி வரும் இந்தக் குளத்தை தற்போது பயன்படுத்தக் கூடாது என தடுப்பது ஏற்புடையது அல்ல. குறிப்பாக ஆதி திராவிடர் இன மக்கள் பயன்படுத்தி வரும் குளத்தினை தடுப்பது, தீண்டாமையாகக் கருதப்படும். இதனால் மேலும் பெரும் பிரச்னை ஏற்படாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து குளத்தினை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் அரசு சார்பில் தூர்வாரி தர வேண்டும்" என்று அரசு அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.
from Latest News https://ift.tt/G6r4bTc
0 Comments