``திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டது ஆங்கிலேயர்கள்தான்!" - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ``ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள்" என்று வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கூறியிருக்கிறார்.

வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வேலூருக்கு இன்று வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்குள்ள நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து கோட்டை மைதானத்துக்கு வந்த ஆர்.என்.ரவி, ஐ.என்.ஏ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், என்.சி.சி மாணவர்கள், என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய ஆர்.என்.ரவி, ``தமிழ் மக்கள் போல தமிழில் பேச வேண்டும் என்பது தான் அனைத்து விருப்பம். சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் சிப்பாய் புரட்சியில் பங்கேற்றனர். நேதாஜி ஐ.என்.ஏ படைக்கு சிப்பாய்கள் வேண்டும் என்றபோது, முதலில் ஆதரவு கொடுத்தவர்கள் வேலூர் வீரர்கள். மதம், பொருளாதாரம் மற்றும் இடத்தின் காரணமாக ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டனர். ஆங்கிலேயர்கள் நம்மை ஆள்வதற்கு முன்னர், பல மன்னர்கள் நம்மை ஆண்டார்கள். மக்கள் அப்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்றுவந்தார்கள்.

வட இந்தியாவிலிருந்து மட்டும் மக்கள் இங்கு வரவில்லை. இங்கே இருந்தும் அறிவை வளர்க்க காசி போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். நாம் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் இருந்தோம். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னரே நாம் கல்வியில் சிறந்து விளங்கியிருந்தோம். ஆங்கிலேயர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். வரலாற்றை இன்னும் உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், நார்த்தில் இருப்பவர்களை வட இந்தியர்கள் என்றும் தென்பக்கம் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள்தான் திராவிடன் என்ற வார்த்தையை முதன் முதலில் குறிப்பிட்டவர்கள்" என்று கூறினார்.



from Latest News https://ift.tt/OwCJt3x

Post a Comment

0 Comments