தனுஷ்கோடி: மயக்க நிலையில் மீட்கப்பட்ட இலங்கை மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள மக்கள் வாழவழியின்றி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இதுவரை 24 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டின் முகவை மாவட்டமான தனுஷ்கோடிக்கு கடல் மார்க்கமாக கள்ளப் படகுகள் மூலம் அகதிகளாக நுழைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் அடுத்த கோதண்ட ராமர் கோயில் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு நடுவே உள்ள மணல் திட்டில் உயிருக்குப் போராடிய நிலையில் இலங்கையைச் சேர்ந்த வயதான தம்பதியினர் கடந்த மாதம் 27-ம் தேதி தஞ்சமடைந்தனர்.

மீனவர்கள் மூலம் இது குறித்து தகவலறிந்து மரைன் மற்றும் கியூ பிராஞ்ச் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, இருவரும் சுயநினைவின்றி மயக்க நிலையில் இருந்தனர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த உடமைகளை பரிசோதித்தபோது அதில் காலாவதியான பாஸ்போர்ட் இருந்துள்ளது. அதில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த பெரியண்ணா சிவன் (80), பரமேஸ்வரி (60) எனத் தெரியவந்தது. பின்னர் மரைன் போலீஸார் ஹோவர் கிராஃப்ட் கப்பலுக்கு தகவல் கொடுத்துவிட்டு, மரைன் போலீஸார் அவர்கள் கொண்டுவந்த சேலையை வைத்து, மயங்கி கிடந்த இருவர் மீதும் வெயில் படாதவாறு சேலையை தூக்கிப் பிடித்தவாறு சுமார் ஏழு மணி நேரம் காத்திருந்தனர்.

கடலோர காவல் படை போலீஸ் சார் முதிய தம்பதியை மீட்கும் காட்சி

ஏழு மணி நேரத்திற்குப் பிறகு கடலோரக் காவல் படையினரின் ஹோவர் கிராஃப்ட் மூலம் முதிய தம்பதியை மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும், உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரமேஸ்வரி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது அவர் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மதுரை‌ ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவலறிந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

``இந்திய மற்றும் தமிழ்நாடு கடலோர காவல் படை போலீஸார் துரித நடவடிக்கை எடுத்திருந்து, இருவரையும் விரைந்து மீட்டிருந்தால் கண்டிப்பாக அந்தப் பெண்ணின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். அதனை செய்யாமல் நீண்ட நேரம் கடற்கரையில் மயக்க நிலையில் அவர்களைக் கிடக்கச் செய்தது அவர்கள் உடல்நிலையை மோசமாக்கியது.

அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த தம்பதி

பிறந்த மண்ணில் வாழவழியின்றி தஞ்சமென நம்மை நம்பி வந்தவர்களை காப்பாற்றாமல் உயிரிழக்க செய்துள்ளது வேதனை அளிக்கிறது. இதன் மூலம் இந்திய கடலோர காவல் படை மற்றும் தமிழ்நாடு கடலோர காவல் குழுவினர் ரோந்து பணியில் முறையாக ஈடுபடுவதில்லை என்பது மாவட்ட நிர்வாகத்திற்கு ஊர்ஜிதமாகியிருக்கிறது" என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அகதியாகவந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News https://ift.tt/iGVxQN8

Post a Comment

0 Comments