மாற்றுத்திறனாளிகளின் 19 அம்ச கோரிக்கை; விசிலடித்து நூதன போராட்டம் - சைகை மூலம் உறுதி அளித்த ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

``அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீதத்தின் படி வேலை வழங்க வேண்டும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு, ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம், மாதாந்திர உதவித் தொகை ரூ.3000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும், வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றத்தினாளிகளுக்கு பணி நியமனம் வழங்க தடுமாற்றம் ஏன்? தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எங்கே? அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சைகை மொழி ஆசிரியர்கள் எங்கே? அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆவின் நிறுவனத்தில் கடைவைக்க அனுமதி வழங்க வேண்டும். கோகோ கோலா நிறுவனங்களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விசில் அடித்து, சைகை மூலம் கோஷம் எழுப்பினர்.

செய்கை மூலம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர்

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தார். அப்போது அவர்கள் சைகை மூலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முடியாததால் சென்னை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இருந்து சைகை மொழி தெரிந்த பெண் அலுவலரை வீடியோ கால் மூலம் பேச வைத்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அவர்களிடன் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கும்படி பெண் அலுவலரிடம் கூறி அதனை அவர்களுக்கு புரிய வைக்கும்படி கூறினார். அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை சைகை மொழியில் எடுத்துரைத்தார். அதனைக் கேட்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து, மாவட்ட ஆட்சியருக்கு தங்கள் சைகை மொழியில் கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், ``அவர்கள் வைத்துள்ள 19 கோரிக்கைகளையும் அரசிடம் எடுத்துக் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாதம்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க கூட்டத்தில், இவர்களையும் கலந்து கொள்ளச் செய்து, அவர்களின் குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.



from Latest News https://ift.tt/GOWyQow

Post a Comment

0 Comments