``எனது மகனின் குழந்தைத்தனத்தை காணவில்லை; ஆயுதம் ஏந்த ஆசைப்படுகிறான்” - உக்ரைன் அதிபரின்‌ மனைவி ஒலினா

உக்ரைனின் முதன்மைக் குடிமகளான(First Lady) உக்ரைன் அதிபர் வெலாடிமர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலினா ஜெலென்ஸ்கா(Olena Zelenska), சமீபத்தில் அமெரிக்க நாட்டின் உயரதிகாரிகளை சந்தித்து ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை கடந்த ஐந்து மாதங்களாக உக்ரைன் சந்தித்து வருகிறது. உக்ரைனில் இருந்து இந்த தாக்குதல்களை சமாளித்து வரும் அதிபர் ஜெலன்ஸ்கியின் சார்பில் அவருடைய மனைவி அமெரிக்கா சென்றுள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் போர்

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனை சந்தித்ததோடு மேலும் பல அதிகாரிகளையும் சந்தித்தார் ஒலினா. அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில், ஒலினா, போரால் உக்ரைன் நாட்டு சிறுவர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, குறிப்பாக தன்னுடைய மகன் குறித்து கூறி உள்ளார். ``இந்த போர் என்னுடைய மகனுள் போர்வீரனாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து விட்டது. என்னுடைய ஒன்பது வயது மகன் கலைகள்,விளையாட்டு போன்றவற்றில் ஆர்வத்தை விடுத்து போரில் மட்டுமே குறியாக இருக்கிறான். போர் ஏற்படுவதற்கு முன்பு அவன் நடனப் பயிற்சிக்கு சென்றான்.

அவனுக்கு பியானோ வாசிக்க தெரியும்; ஆங்கிலம் கற்று கொண்டான். ஒரு விளையாட்டு சங்கத்தில் கூட உறுப்பினராக இருந்தான். ஆனால் தற்போது அவன் சண்டைப் பயிற்சிக்கு செல்வதிலும் துப்பாக்கிச் சுட கற்று கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளான். இதுபோல போரின் தாக்கத்தால் தொலைந்த அவனுடைய குழந்தைத்தனத்தை அவனுக்கு மீண்டும் கொடுக்கவும், அவன் வாழ்வை அவன் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வழிவகுக்க விரும்புகிறேன்" என்றார்.

இதுவரையில் பல அமெரிக்க அதிகாரிகளை சந்தித்த ஒலினா ஜெலென்ஸ்கா, அமெரிக்காவின் நீதித்துறையிடம் உக்ரைனுக்கு இன்னும் அதிக ஆயுதங்களை வழங்கி உதவ உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் நீதித்துறை அதிகாரிகள் முன்பு பேசிய ஒலினா, ரஷ்யாவின் போர்வெறியில் உக்ரைனை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு விட்டதாக குறிப்பிட்ட அவர், வான்வழி தாக்குதலை சமாளிக்க போதிய ஆயுதங்களை வழங்கி உதவ வேண்டினார்.

``நான் இதுவரை கேட்காத ஒன்றை இப்போது கேட்கிறேன். நான் ஆயுதங்களைக் கேட்கிறேன். ஆயுதங்களை வைத்து போரிட்டு அடுத்த நாட்டை வெற்றி கொள்வதற்காக அல்ல, எங்களுடைய சொந்த தாய் மண்ணை காப்பாற்றி கொள்வதற்காகக் கேட்கிறேன். வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள போதிய ஆயுதங்களைக் கேட்கிறேன். அதன்மூலம் ரஷ்யாவின் ராக்கெட்டுகள் எங்கள் குழந்தைகளைக் கொல்வதையும், குழந்தைகளின் வீடு மற்றும் அவர்களின் குடும்பத்தையும் அழிப்பதைத் தடுக்க முடியும்." எனக் கூறினார்.



from Latest News https://ift.tt/Wr3qFAb

Post a Comment

0 Comments