நாமக்கல் நகரில், திருச்சி சாலையில் உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (48). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில், இவர் கடந்த 18 -ம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு, நள்ளிரவு வீடு திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நாமக்கல் டு திருச்சி சாலையில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடம் அருகே அவர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்மநபர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தி உள்ளார். இதனால், குமரேசனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரேசன் இறந்து விட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து அவரின் மனைவி துர்கா நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்ய, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கொலையாளி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவரை நெருங்கி உள்ள தனிப்படையினர் விரைவில் கொலையாளி கைது செய்யப்படுவார் என தெரிவித்தனர்.
கொலையாளி கைது செய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/jEYLQ3G
0 Comments