சென்னை: கால்சென்டர் பழக்கம் கொலையில் முடிந்தது எப்படி?!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வெள்ளக் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (23). இவர் சென்னையில் உள்ள கால்சென்டரில் வேலை செய்து வந்தார. அதே கால்சென்டரில் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமாரும் வேலை செய்து வந்தார். அதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிந்தாதிரிப்பேட்டை ஐயா தெருவில் ஒரே வீட்டில் கணவன் மனைவியைப் போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

கொலை

இந்த நிலையில் மஞ்சுளா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தோஷ்குமார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மஞ்சுளாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மஞ்சுளாவின் மரணம் குறித்து சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பாலநாராயணஷா, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அந்தப் புகாரில் `என் அப்பாவுக்கு சொந்தமாக 9 வீடுகள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளன. அதில் மாடியில் உள்ள வீட்டில் சந்தோஷ்குமார், மஞ்சளாவுடன் தங்கியிருந்தார். இருவரும் கால் சென்டரில் வேலைப்பார்த்து வருவதாகக் கூறியிருந்தனர். சம்பவத்தன்று போலீஸார் வந்து மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டதாகத் என்னிடம் தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றபோது கதவு பூட்டியிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மஞ்சுளாவின் வலது கண் பகுதியில் ரத்த காயம் இருந்தது. கழுத்தில் காயங்கள் இருந்தன. மஞ்சுளாவின் அருகில் சிமெண்ட் நிற பூ போட்ட வெள்ளை நிற துப்பட்டா கிடந்தது. அதனால் மஞ்சுளாவில் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சந்தோஷ்குமார்

புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சந்தோஷ்குமாரும் மஞ்சுளாவும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் சமீபகாலமாக மஞ்சுளா அடிக்கடி செல்போனில் வேறு ஒரு நபருடன் பேசி வந்துளளார். அதனால் சந்தேகமடைந்த சந்தோஷ்குமார், மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 21-ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார், மஞ்சுளா போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். அதனால் மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், துப்பட்டாவால் மஞ்சுளாவில் கழுத்தை நெரித்துள்ளார். அதில் அவர் இறந்து விட்டார். அதை மறைக்க மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டதாக சந்தோஷ்குமார் நாடகமாடியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில் மஞ்சுளா, கழுத்து நெரிக்கப்பட்டதால் இறந்திருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்திய போதுதான் மஞ்சுளா கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமாரைக் கைது செய்து துப்பட்டா, இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.



from Latest News https://ift.tt/hiavR1L

Post a Comment

0 Comments