தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஜவுளிக்கடையும், அதனுடன் இணைந்த நகைக்கடையும் உள்ளது. டிப்டாப் உடையணிந்த இரண்டு பெண்கள் இந்த நகைக்கடைக்குள் நுழைந்தனர். சுமார் 30 நிமிடம், தங்கச் சங்கிலிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில், 10 சவரன் மதிப்புள்ள ஒரு தங்கச்சங்கிலியை தேர்வு செய்துள்ளனர். கடையின் ஊழியர்களிடம் , “நாங்க விஜிலென்ஸ் ஆபிஸர்ஸ். உங்க கடை முதலாளியை எங்கே? நாங்க அவங்களை சந்திக்கணும்” எனக் கேட்க, கடையின் மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் என்பவர் அந்த இரண்டு பெண்களிடம் பேசியுள்ளனர்.
``ஏரலில் உள்ள உங்களோட கடை மேல புகார் வந்திருக்கு. நாங்க ரெய்டு நடத்தினா உங்க கடையோட பேரு கெட்டுப் போகும். நாங்க செலக்ட் பண்ணி வச்சிருக்குற நகைகளை எங்களுக்குக் கொடுத்திடுங்க. இல்லேன்னா நடக்குறதே வேற” எனக் கூறியுள்ளனர்.
``விரும்பும் நகைகளோட விலையைக் குறைத்துக்கொள்ளச் சொல்வார்களே தவிர இதுவரையில் யாரும் நகைகளை இனாமாகக் கேட்டதில்லை” என மேற்பார்வையாளர் சிவராம கிருஷ்ணன் கேட்டிருக்கிறார். ``உங்ககிட்ட நாங்க விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்ல. உங்க முதலாளியைக் கூப்பிடுங்க” என மீண்டும் அவர்கள் சொல்ல சந்தேகம் அடைந்த மேற்பார்வையாளர், இருவரின் ஐ.டி கார்டுகளைக் கேட்டிருக்கிறார்.
அதில், ஒருவர் மட்டும் ஐ.டி கார்டினைக் காட்டியிருக்கிறார். ``முதலாளியை வரச் சொல்றோம்” எனச் சொல்லிவிட்டு, இரண்டு பேரையும் தனியாக அமர வைத்துவிட்டு ஊழியர்கள் அவர்களுக்கு குடிப்பதற்காக கூல் டிரிங்க்ஸ் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் கடையின் மேற்பார்வையாளர், மத்தியபாகம் போலீஸாருக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் சில போலீஸார் நகைக்கடைக்கு வந்து அந்த இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஏரலைச் சேர்ந்த பாபி என்ற ராஜலெட்சுமி, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள பெரிய கடையைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரிந்தது.
அழகுக்கலை நிபுணர்களான அவர்கள் இருவரும் விஜிலென்ஸ் அதிகாரிகள் போல் நடித்து தங்க நகைகளை அபகரிக்க முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பாபி என்ற ராஜலெட்சுமி மீது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலையத்தில் ஏற்கெனவே மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. விஜிலென்ஸ் அதிகாரிகள் போல நடித்து மோசடியில் ஈடுபட முயன்ற பெண்களை சமயோஜிதமாக செயல்பட்டு போலீஸாரிடம் பிடித்துக்கொடுத்த கடையின் ஊழியர்களை போலீஸார் பாராட்டினர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/SO59Pfj
0 Comments