மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் துணையோடு உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. தற்போது சிவசேனா அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகியிருக்கிறார். மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று கூடுகிறது. இதில் சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. பா.ஜ.க-வின் ராகுல் நர்வேகர் சபாநாயகர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். சிவசேனா கூட்டணி சார்பாக ராஜன் சால்வி சபாநாயகர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று சபாநாயகர் தேர்தல் நடக்க இருப்பதையடுத்து கோவாவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நேற்று மாலை மும்பை அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் நேராக மீண்டும் ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் இன்றைய சபாநாயகர் தேர்தல் மற்றும் நாளை நடக்கும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகிய இரண்டிலும் கலந்துகொண்ட பிறகு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சபாநாயகராக இருந்த நானா பட்டோலே கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, அந்தப் பதவி தொடர்ந்து காலியாக இருக்கிறது. துணை சபாநாயகர் நர்ஹரி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 16 பேருக்கு கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் பதவியை பறிக்கக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அந்த நோட்டீஸ் மீது புதிய சபாநாயகர் முடிவு செய்வார். சிவசேனா அதிருப்தி கோஷ்டிக்கு 10 சுயேச்சைகள் உட்பட 50 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்க சிவசேனா மற்றும் அதிருப்தி கோஷ்டி தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் 16 எம்.எல்.ஏ-க்களை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று சிவசேனா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
இன்றைய சபாநாயகர் தேர்தலையொட்டி சட்டமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. துணை போலீஸ் கமிஷனர் ஹரி பாலாஜி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை சபாநாயகராக இருக்கும் நர்ஹரி தனது பணியை செய்வார் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
from Latest News https://ift.tt/rFQZuzw
0 Comments