மணிப்பூரின் தெங்னௌபல் மாவட்டத்தில் மோரே என்ற இடத்தில் குக்கிகள், தமிழர்கள், மெய்திகள், பஞ்சாபிகள், மார்வாரிகள் மற்றும் வங்காளிகள் உட்பட சுமார் 50,000 மக்கள் தொகைக் கொண்ட கலப்பு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியா - மியான்மர் எல்லையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள புலம்பெயர்ந்தோரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களே அதிகம். இந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் ஆட்டோ ஓட்டுநர் பி.மோகன் மற்றும் வணிகர் எம்.அய்யனார் ஆகிய இரண்டு தமிழர்கள் காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இரண்டு தமிழர்களும் அண்டை நாடான மியான்மரில் உள்ள தமு என்ற இடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, மோரே செக்டரில் உள்ள இந்தியா - மியான்மர் எல்லை வாசலில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள தமு என்ற இடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் மியான்மர் ஆட்சிக்குழுவால் அமைக்கப்பட்ட பியூ ஷா ஹ்டீ என்ற ராணுவ அமைப்பினராக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், அது தொடர்பாக விசாரிப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஆட்டோ ஓட்டுநர் மோகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது குறிப்பிடதக்கது. இவர்கள் வசித்து வந்த பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அப்பாவிகள் என்றும், நண்பர்களை காண தமு பகுதிக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. விசாரணை முடிவில் தான் முழு தகவல்களும் வெளியாகும்.
from Latest News https://ift.tt/e7Cw2Jq
0 Comments